ஜப்பானிய முதலீடுகளுக்கு ஊழல் ஒழிப்பும், நல்லாட்சியும் முக்கியம்
சிறிலங்காவில் ஜப்பானின் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கான நம்பிக்கையை, மீட்டெடுப்பதற்கு ஊழலை ஒழிப்பதும் நல்லாட்சியும் முன்நிபந்தனைகளாக இருப்பதாக – ஜப்பான் தூதுவர் அகியோ இசோமாட்டா, (Akio Isomata) தெரிவித்துள்ளார்.
ஜப்பான் வெளியுறவு அமைச்சின் சர்வதேச ஒத்துழைப்பு பணியகத்தின் உதவி அமைச்சர்/ பணிப்பாளர் நாயகம், இஷிசுகி ஹிடியோ (ISHIZUKI Hideo), சிறிலங்காவின் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவைச் சந்தித்து, ஜப்பான்-சிறிலங்கா பொருளாதார ஒத்துழைப்பு கொள்கை தொடர்பாக கலந்துரையாடினாார்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஜப்பானியத் தூதுவர் அகியோ இசோமாட்டா,
நிலையான வளர்ச்சிக்காக ஜப்பான் சிறிலங்காவின் அரசாங்கத்துடன் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றும்.
சுதந்திரமான மற்றும் வெளிப்படையான இந்தோ பசிபிக் பகுதியைப் பராமரிப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் சிறிலங்கா ஒரு முக்கிய பங்காளியாக உள்ளது.
சிறிலங்காவுடன் அபிவிருத்தி ஒத்துழைப்பைத் தொடரவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், குறிப்பாக ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கும் அதன் முயற்சிகளை ஆதரிப்பதற்கும் ஜப்பான் உறுதியாக உள்ளது. என்று தெரிவித்துள்ளார்.