செம்மணியில் இதுவரை 33 சடல எச்சங்கள் மீட்பு- பாடசாலை பையும் கிடைத்தது
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 33 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், முதல்முறையாக சில தடயப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று மதியம் வரை இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின் போது பல குழந்தைகளின் எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இதையடுத்து இதுவரை இனங்காணப்பட்டுள்ள எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
அவற்றில் 22 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை நேற்றைய அகழ்வின் போது, ஒரு குழந்தையின் எலும்புக்கூட்டுத் தொகுதியுடன், அரச சார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்பட்டதாக கருதப்படும், நீற நிற புத்தகப் பை ஒன்றும், பிளாஸ்டிக் வளையல்களும் கண்டறியப்பட்டுள்ளன.
அதேவேளை புதைகுழிப் பகுதியில் மண் ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், ட்ரோன் மூலம் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் புதிதாக தோண்டும் பணிகளை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.