பிரசவத்திற்காக அமெரிக்கா செல்லும் இலங்கையருக்கு எச்சரிக்கை
இலங்கையர்கள் மற்றும் ஏனைய வெளிநாட்டு பயணிகளுக்கு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், எச்சரிக்கை விடுத்துள்ளது.
தங்கள் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்காக, குழந்தையை பிரசவிக்கும் நோக்கத்துடன் சுற்றுலா நுழைவிசைவில் அமெரிக்காவிற்கு பயணம் செய்பவர்களுக்கு எதிர்காலத்தில் நுழைவிசைவு மறுக்கப்படும் அபாயம் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய பயணிகள் பெரும்பாலும் அமெரிக்க அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் மருத்துவ உதவியை நம்பியிருப்பதாகவும், இது அமெரிக்க வரி செலுத்துவோர் மீது நிதிச் சுமையை ஏற்படுத்துவதாகவும், அமெரிக்க தூதரகத்தின் எக்ஸ் தளப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
ஒரு விண்ணப்பதாரரின் வருகைக்கான முதன்மை நோக்கம் குடியுரிமை சலுகைகளுக்காக, பிரசவம் என்று அவர்கள் நம்பினால், சுற்றுலா நுழைவிசைவை மறுக்க அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தற்போதுள்ள அமெரிக்க விசா விதிமுறைகளின் கீழ் அனுமதிக்கப்படாத ஒரு காரணம் என்றும் அமெரிக்க தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.