அனுர அரசின் முயற்சிகளுக்கு ஐ.நா மனித உரிமைகள்ஆணையாளர் ஆதரவு
சிறிலங்காவில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் ஆதரவு தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், தனது பயணத்தை நிறைவு செய்வதற்கு முன்னர், நேற்று பிற்பகல் சிறிலங்கா அதிபரை அவரது செயலகத்தில் சந்தித்துள்ளார்.
இதன் போதே வோல்கர் டர்க் இந்தக் கருத்தை வெளியிட்டார் என சிறிலங்கா அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் தற்போது இடம்பெற்று வரும் புதிய அரசியல் மற்றும் சமூக மாற்றத்தைப் பாராட்டியுள்ள வோல்கர் டர்க், வடக்கு மற்றும் தெற்கில் உள்ள அனைத்து மக்களும் தற்போதைய அதிபர் மற்றும் அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார் என்றும் சிறிலங்கா அதிபர் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தனது பயணத்தின் போது சிறிலங்காவில் நடைபெற்று வரும் புதிய மாற்றம் குறித்து தெளிவான புரிதலைப் பெற முடிந்ததாகத் தெரிவித்த,வோல்கர் டர்க், இன்று நாட்டின் அனைத்து மக்களும் சிறந்த எதிர்காலத்திற்கான புதிய நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.
காணாமல் போனோர் பிரச்சினை குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
வடக்கு மற்றும் தெற்கில் காணாமல் போனவர்களின் உறவினர்களின் வேதனைகள் ஒரே மாதிரியானவை என்றும் அவர்கள் அரசாங்கத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைகள் நிறைவேறும் என்றும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் எதிர்பார்க்கிறது என்றும் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் கலாசாரம் காரணமாக மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செயல்படத் தவறியுள்ளதால், காணாமல் போனவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்தி மறுசீரமைக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் இதன் போது ஆராயப்பட்டுள்ளது.
நாட்டில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாக்க தேவையான சீர்திருத்தங்களை செயல்படுத்துவதற்கும் தனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று இந்தச் சந்திப்பின் போது சிறிலங்கா அதிபர் உறுதியளித்துள்ளார்.
நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதே தற்போதைய நிலைமையில் அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்று கூறிய அவர், சவால்களை நன்கு புரிந்து கொண்டு, அந்த நோக்கத்திற்காக உறுதிபூண்டுள்ளதாகவும், சர்வதேச அளவில் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவின் இந்த நிலைமையை உலகிற்கு கொண்டு செல்வதன் மூலம் சர்வதேச அளவில் சிறிலங்காவின் நற்பெயரை மேம்படுத்துவதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் ஆதரவு அவசியம் என்றும் சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளதாகவும் அவரது ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.