அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஆபத்து
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்ந்து அரசஅதிகாரியாக பதவி வகிப்பதாகவும், அவர் நாடாளுமன்ற மற்றும் அரச அதிகாரி பதவிகளை ஒரே நேரத்தில் வகிப்பது, அதிகார வேறாக்க கொள்கைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் அர்ச்சுனா நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றுவதற்கு தகுதியற்றவர் என அறிவிக்கக் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன நேற்று சட்டமா அதிபர் தரப்பில் முன்னிலையாகி, அவரது இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
அரச அதிகாரி ஒரே நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றுவது அதிகார வேறாக்க கொள்கைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னொரு சந்தர்ப்பத்தில், மருத்துவர் அர்ச்சுனா நிலுவையில் உள்ள ஒழுக்காற்று விசாரணை காரணமாக, சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
நீதியரசர்கள் மாயாதுன்ன கொரயா மற்றும் மஹேன் கோபல்லாவ ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, இந்த மனு மீதான மேலதிக விசாரணையை ஜூலை 2 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
சமூக ஆர்வலர் ஓஷல ஹெரத், மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என்று அறிவிக்க கோரும் மனுவை தாக்கல் செய்திருந்தார்.