பொறுப்புக்கூறலுக்கு நேர்மையான அணுகுமுறை அவசியம்
சிறிலங்காவில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கு, நேர்மையான மற்றும் உண்மையான அணுகுமுறை அவசியம் என்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கிடம், தமிழ்க் கட்சிகள், பொது அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை நேற்றிரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன்,செல்வம் அடைக்கலநாதன், சாணக்கியன், பவானந்தராஜா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் உள்ளிட்டவர்கள் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இதன்போது, இலங்கை தமிழ் அரசு கட்சி , அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து கையெழுத்திட்ட கடிதம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டது.
நான்கு தசாப்த காலப் போரின் போது நடந்த குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் விடயத்தில், கடந்த 16 ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“உங்கள் வருகையை சிறிலங்கா அரசாங்கததின் சட்டபூர்வமான தன்மையை அதிகரிப்பதற்கும், உங்கள் பணியகத்தின் உறுதியையும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுதியையும் பலவீனப்படுத்துவதற்கும், அவர்களாால் ஒரு கருவியாக பயன்படுத்தப்படும் என்றும், நாங்கள் கவலைப்படுகிறோம்,” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.