மேலும்

சுயாதீன நிபுணர்களால் விசாரணை நடத்தப்பட வேண்டும்- செம்மணியில் வோல்கர் டர்க்

மனிதப் புதைகுழிகள் குறித்து தடயவியல் நிபுணத்துவம் கொண்ட சுயாதீன நிபுணர்களால் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று யாழ்ப்பாணத்திற்குப் பயணம் மேற்கொண்ட அவர், செம்மணியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தளத்தை பார்வையிட்ட பின்னர், அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“நான் இங்கே யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள செம்மணியில் உள்ள ஒரு மனித புதைகுழி தளத்தில் இருக்கிறேன்.

கடந்த காலத்தை மிகவும் தெளிவாகக் காணக்கூடிய இடங்களைப் பார்வையிடுவது, எப்போதும் மிகவும் உணர்ச்சிபூர்வமானது.

19 பேரின் எச்சங்கள் அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவர்களில் மூன்று பேர் கைக்குழந்தைகள் என்று நம்பப்படுகிறது.

இந்த இடம் விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் உள்ளது.

ஒரு மனித புதைகுழி விடயத்தில், ​​செய்ய வேண்டிய ஒரே விடயம், உண்மையை வெளிக்கொண்டு வரவும், அன்புக்குரியவர்கள் காணாமல்போன குடும்ப உறுப்பினர்களின் வலி மற்றும் துன்பத்தை குறைக்கவும் கூடிய, தடயவியல் நிபுணத்துவம் கொண்ட சுயாதீன நிபுணர்களால் முழுமையான வலுவான விசாரணைகளே ஆகும்.

நான் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்தேன்.

1990 களின் நடுப்பகுதியில் மருமகன் காணாமல்போன ஒரு பெண்ணை நான் சந்தித்தேன். அவருக்கு என்ன நடந்தது என்று அவர்கள் எப்போதும் கவலைப்படுகிறார்கள்.

தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாத மக்களிடம் பேசும்போது, நாங்கள் அவர்களின் வலி மற்றும் துன்பத்தை உணருகிறோம்.

இது பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை நோக்கிய மேலும் ஒரு படி என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *