பச்சிலைப்பள்ளி, சாவகச்சேரி, மூதூர் பிரதேச சபைகள் தமிழ் அரசு கட்சி வசமாயின
கிளிநொச்சி- பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக சுப்பிரமணியம் சுரேன் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று முற்பகல் இடம்பெற்ற தவிசாளர் தெரிவில், தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் சுப்பிரமணியம் சுரேன் முன்நிறுத்தப்பட்டார்.
அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில், தவிசாளராக ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி பிரதேச சபை
சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் பதவியை இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்று பிற்பகல் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது, இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் பொன்னையா குகதாசனும், தமிழ் தேசிய பேரவை சார்பில் செல்வரத்தினம் மயூரனும் தவிசாளர் பதவிக்கு முன்மொழியப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வாக்கெடுப்பில் இருவரும் தலா 10 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதால், திருவுளச்சீட்டு மூலம் பொன்னையா குகதாசன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
தமிழ் தேசிய பேரவையின் உறுப்பினர் ஒருவர் நடுநிலை வகித்தமையினால், இந்த சபையைக் கைப்பற்றும் வாய்ப்பை தமிழ் தேசிய பேரவை இழந்துள்ளது.
மூதூர் பிரதேச சபை
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆட்சியமைத்துள்ளது.
இன்று இடம்பெற்ற அமர்வில் 9 வாக்குகளைப் பெற்று தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பிரலாதன் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த பைசர் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் அரசுக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் மூதூர் பிரதேச சபையில் கூட்டாக ஆட்சியமைத்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியும் இதற்கு ஆதரவு வழங்கியுள்ளது.