நைஜீரியாவிடம் எரிபொருள் கொள்வனவுக்கு சிறிலங்கா முயற்சி
நைஜீரியாவிலிருந்து பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராய சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வருவதாலும், எரிபொருள் விநியோகச் சங்கிலியில் மேலும் இடையூறுகள் ஏற்படலாம் என்ற காரணத்தினாலும் மாற்று வாய்ப்புகள் குறித்து சிறிலங்கா கவனம் செலுத்தியுள்ளது.
ஈரான் மீதான தாக்குதல்களை அடுத்து சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
அதேவேளை, அமெரிக்காவும் தாக்குதல்களில் இறங்கியுள்ளதை அடுத்து, முக்கியமான எண்ணெய் விநியோக வழியான ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரானிய நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்த நிலையில், நைஜீரியா மற்றும் வேறு சில எண்ணெய் உற்பத்தி நாடுகளில் இருந்து மாதிரிகளைப் பெற்று, அவற்றின் நம்பகத்தன்மையை உள்ளூர் ஆய்வகங்களில் பரிசோதிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக, சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருண தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய விநியோகச் சங்கிலியில் ஏற்படும் இடையூறுகளிலிருந்து ஏற்படும் எந்தவொரு தாக்கத்தையும் தடுக்க, இந்த நடவடிக்கை முக்கியமான முயற்சியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவின் எரிபொருள் விநியோகத்தில் கிட்டத்தட்ட 60 சதவீதத்தை, சிறிலங்கா பெட்ரோலிய கூட்டுத்தாபனமும், எஞ்சியதை, சினோபெக், லங்கா ஐஓசி மற்றும் ஆர்எம் பார்க் ஆகியன நிறுவனங்களும், பங்கு வகிக்கின்றன.
தற்போதைய மோதல்களால், உள்ளூர் சந்தையில் உடனடி தாக்கம் எதுவும் ஏற்படாது என்றும், தற்போதைய உலகளாவிய சீர்குலைவின் விளைவு இந்த ஆண்டு ஓகஸ்ட் அல்லது செப்ரெம்பர் மாதத்திற்குள் உணரப்படும் என்றும் டி.ஏ. ராஜகருண கூறினார்.
இதற்கிடையில், சிறிலங்காவுடன் எண்ணெய் வர்த்தகத்தை மேற்கொள்ள ரஷ்யா முன்வந்துள்ள போதும், பொருளாதாரத் தடைகள் மற்றும் அரசியல் பிரச்சினைகள் காரணமாக ரஷ்யாவிலிருந்து கொள்முதல் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லைஎன்றும் சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபன தலைவர் ராஜகருணா தெரிவித்துள்ளார்.