சிறிலங்காவில் நீதி, பொறுப்புக்கூறலில் எந்த முன்னேற்றமும் இல்லை
சிறிலங்காவில் புதிய அரசாங்கம் அமைந்த போதிலும், நீதி அல்லது பொறுப்புக்கூறலில் எந்த அர்த்தமுள்ள முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று, சர்வதேச ஜூரிகள் ஆணைக்குழு (ICJ) தெரிவித்துள்ளது.
ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 59ஆவது அமர்வில் கடந்த செவ்வாய்க்கிழமை உரையாற்றிய, செயலாளர் நாயகம் சந்தியாகோ கன்ரன் (Santiago Canton) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவில் ஆயுத மோதல்கள் முடிவடைந்து16 ஆண்டுகள் ஆன பிறகும், தண்டனை விலக்குரிமை இன்னும் வேரூன்றியுள்ளது.
புதிய அரசாங்கம் அமைந்த போதிலும், நீதி அல்லது பொறுப்புக்கூறலில் எந்த அர்த்தமுள்ள முன்னேற்றமும் ஏற்படவில்லை.
செம்மணி புதைகுழியில், குழந்தைகள் உட்பட 19 மனித எச்சங்கள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, சர்வதேச தடயவியல் மேற்பார்வைக்கான அவசரத் தேவையை எடுத்துக் காட்டுகிறது.
காலனித்துவ கால சட்டத்தைப் பயன்படுத்தி அரசாங்கத் திணைக்களங்களால் பரவலாக நில அபகரிப்புகள் இடம்பெறுவதுடன், மற்றும் அடிப்படை சுதந்திரங்களை மீறும் தேவையற்ற கண்காணிப்புகள் தொடர்கிறது.
அதே நேரத்தில் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் 3,000 நாட்களுக்கும் மேலாக பதில்கள் இல்லாமல் போராடி வருகின்றன.
நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் போன்ற அடக்குமுறைச் சட்டங்கள் – சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை மீறும் வகையில், சிவில் உரிமைகளை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சிறிலங்கா பயணத்தை, உறுதியான சர்வதேச பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை முன்னெடுக்கப் பயன்படுத்துமாறு சர்வதேச ஜூரிகள் ஆணைக்குழு வலியுறுத்துகிறது.
மேலும் பேரவையின் 60வது அமர்வில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் ஆணை மற்றும் சிறிலங்கா பொறுப்புக்கூறல் திட்டம் ஆகிய இரண்டையும் புதுப்பிக்க நாங்கள் அழைப்பு விடுக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.