மண்டைதீவு புதைகுழிகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்- சிறிதரன்
மண்டைதீவு மனித புதைகுழிகள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,
“1990களில் வேலணை, மண்கும்பான் மற்றும் அல்லைப்பிட்டி பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட குழந்தைகளும் இளைஞர்களும் மண்கும்பான் பகுதியில் உள்ள புனித தோமையர் தேவாலயத்தின் கூட்டுப் புதைகுழியில் அடக்கம் செய்யப்பட்டதாக வடக்கு மற்றும் கிழக்கு மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
மண்கும்பானைச் சேர்ந்த சுசாய் தாஸ் யேசுரத்தினம் தர்மராணி என்ற தாய், தனது இரண்டு குழந்தைகள் உட்பட 84 பேர் காணாமல் போனதாகக் கூறப்படும் நிலையில், அவர்களுக்கு நீதி கோரி, 2025 ஏப்ரல் 30, ஆம் திகதி சிறிலங்கா அதிபருக்கு ஒரு கடிதம் அனுப்பி, அதன் நகலை என்னிடம் ஒப்படைத்துள்ளார்.
அந்தப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களுடன் கூடிய தகவல்கள் உள்ளன.
மண்கும்பான், அல்லைப்பிட்டி மற்றும் வேலணை பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட அனைத்து குழந்தைகளும் இளைஞர்களும் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர்.
சிறிலங்கா இராணுவம் அவர்களை அழைத்துச் சென்றபோது, அவர்களின் பெற்றோரும் உறவினர்களும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சென்று அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கெஞ்சினார்கள்.
அப்போது, சிறிலங்கா இராணுவம் அவர்களை விசாரித்து விடுவிக்கும் என்று அவர் பதிலளித்திருந்தார்.
ஆனால் அவர்களில் யாரும் விடுவிக்கப்படவில்லை, கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர்.
எனவே, மண்டைதீவு புனித தோமையர் தேவாலயப் பகுதியில் உள்ள மனித புதைகுழி தொடர்பாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மேலும் வலியுறுத்தினார்.