மாகாணசபைத் தேர்தல் – இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை
மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அதுகுறித்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பின்னரே தேர்தல் நடத்தப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, தெரிவித்துள்ளார்.
தேவையான சட்டங்களைத் திருத்த நடவடிக்கை எடுப்பதன் மூலம், இந்தத் தேர்தல்களுக்கான அடித்தளத்தை உருவாக்க அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.
அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத்தையும், தேர்தல் திகதியை தீர்மானிக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த சில மாதங்களுக்குள் மூன்று பெரிய தேர்தல்களை நடத்தி விட்டதாகக் கூறி, எந்தவொரு தேர்தலையும் ஒத்திவைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
அதேவேளை, நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், தேவையான திருத்தங்களை தாமதமின்றி செய்யக்கூடிய வகையில், தன்னால் தனிநபர் பிரேரணையாக முன்வைக்கப்பட்டுள்ள, மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை, அரசாங்க சட்டமூலமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மக்களுக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்றும் ஒரு வழியாக, இந்த சட்டமூலத்தை முழுமையாக ஆதரிப்பதன் மூலமும், அது விரைவாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதன் மூலமும் அரசாங்கம் தனது உறுதிப்பாட்டை நிரூபிக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.