வடக்கு, கிழக்கில் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு
சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளை தடுப்பதற்கு, சிறிலங்கா கடற்படையின் உதவியை பெறுவது மற்றும் வடக்கு,கிழக்கில் உள்ள காணிகளை விடுவிப்பது குறித்து, பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறிலங்கா அதிபர அனுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சிற்கான ஆலோசனைக் குழுவின் கூட்டம் நேற்று சிறிலங்கா அதிபர் தலைமையில், நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க சிறிலங்கா கடற்படையின் உதவியைப் பெறுவது மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிகளை விடுவிப்பது தொடர்பாக குழுவின் உறுப்பினர்களால் கவலை எழுப்பப்பட்டது.
இது குறித்து ஆராயப்பட்ட போது, பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்தார்.
இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த, முப்படைகளின் தளபதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.