ஆயுதக் கொள்கலன்கள் குறித்து விரைவில் அர்ச்சுனாவிடம் விசாரணை
கொழும்பு துறைமுகத்தில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருந்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கூறிய குற்றச்சாட்டுக் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
சிறிலங்காவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்துள்ளார்.
அர்ச்சுனா இராமநாதனின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படுமா என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,
அர்ச்சுனாவின் கூற்றுகள் குறித்து விசாரணை நடத்தப்படும்.
சுங்கத் திணைக்களம் மூலம் யார் ஆயுதங்களையும் துப்பாக்கிகளையும் கொண்டு வருவார்கள்? அர்ச்சுனா சொன்னது முற்றிலும் பொய்.
அவரைப் போன்றவர்கள் அரசியல் ஆதாயங்களுக்காக இவ்வாறான கதைகளைத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.
அவர்கள் பொய்களைப் பரப்ப நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.
அரசியல் மற்றும் தனிப்பட்ட ஆதாயத்திற்காக, யாராவது பொய்யான கூற்றுக்களை வெளியிட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.