சுவிஸ் எயர் விமான விபத்தில் உயிர்தப்பிய லக்ஷ்மன் கதிர்காமர்
சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், 1979ஆம் ஆண்டு சுவிஸ் எயர் விமான விபத்தில் உயிர்தப்பியவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
1994ஆம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட லக்ஷ்மன் கதிர்காமர், முன்னர் ஜெனிவாவை தலைமையகமாக கொண்ட ஐ.நாவின் உலக புலமைச் சொத்து அமைப்பின் ஆசிய பசுபிக் பிரிவின் தலைவராக பணியாற்றியிருந்தார்.
1979ஆம் ஆண்டு ஒக்ரோபர் 7ஆம் திகதி அவர், சுவிஸ் எயர் விமானத்தில் பீஜிங்கிற்குப் பயணமாகிய நிலையில், அந்த விமானம் எதென்ஸ் விமான நிலையத்தில் ஓடுபாதையில் மோதி தரையிறங்கியது.
154 பேர் பயணித்த அந்த விமானம், வெடித்து தீப்பந்து போல எரிந்தது. அந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
எனினும்,லக்ஷ்மன் கதிர்காமர், விமானத்தின் அவசர கதவு வழியாக குதித்து உயிர் தப்பினார்.
முள்ளந்தண்டில் காயம் அடைந்த அவர் 3 மாதங்கள் ஜெனிவா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார்.
சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராக இருந்த கதிர்காமர், 2005ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கொழும்பில் அவரது வீட்டில் இருந்த போது சினப்பர் தாக்குதலில் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.