ஜெர்மனி அரச தலைவரை சந்திக்காமல் நாடு திரும்பிய சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க ஜெர்மனியின் அரச தலைவரைச் சந்திக்காமலேயே நாடு திரும்பியுள்ளார்.
நான்கு நாள்கள் பயணமாக கடந்த 11ஆம் திகதி பெர்லின் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, 13ஆம் திகதி தனது பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார்.
அவருக்கு ஜெர்மனியின் அதிபர் பிராங் வோல்டர் ஸ்டெய்ன்மியர் அதிபர் மாளிகையில் ஆயுதப்படைகளின் மரியாதையுடன் கூடிய வரவேற்பை அளித்திருந்தார்.
அத்துடன் ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் ஜொஹான் வடேபுல் (Johann Wadephul) மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் றீம் அலபாலி ரடோவானையும் (Reem Alabali Radovan ) அவர் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
பல்வேறு தொழிற்துறையினரையும், புலம்பெயர் இலங்கையர்களையும் சிறிலங்கா அதிபர் சந்தித்து முதலீடுகளை கொண்டு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
எனினும் ஜெர்மனியின் சான்சலர் (Chancellor) எனப்படும் நாடாளுடன்றத்தினால் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவர் பிரெட்றிக் மெர்ஸ் (Friedrich Merz) சிறிலங்கா அதிபரைச் சந்திக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், 2016இல் ஜெர்மனிக்குச் சென்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, அப்போதைய ஜெர்மன் அரச தலைவர் ஏஞ்சா மேர்க்கல்லும் (Angela Merkel), 2001இல் சந்திரிகா குமாரதுங்கவை, அப்போதைய ஜெர்மன் அரச தலைவர் ஜெர்ஹாட் ஸ்ரோடரும் ( Gerhard Schröder) சந்தித்திருந்தனர்.