மட்டு. மாநகர சபையை சஜித் அணியின் ஆதரவுடன் கைப்பற்றியது தமிழரசு கட்சி
மட்டக்களப்பு மாநகர சபை முதல்வராக, தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தெரிவுக்கான அமர்வு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அஸ்மி தலைமையில் மாநகர சபை சபா மண்டபத்தில் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த சிவம் பாக்கியநாதனை முதல்வர் பதவிக்கு, அதே கட்சியை சேர்ந்த உறுப்பினர் மாசிலாமணி சண்முகலிங்கம் முன்மொழிந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் நவரெத்தினராசா ரகுபரன் அவரது பெயரை வழிமொழிந்த நிலையில், போட்டியின்றி ஒருமனதாக மாநகரசபை முதல்வராக சிவம் பாக்கியநாதன் தெரிவு செய்யப்பட்டார்.
அதேவேளை, பிரதி முதல்வர் பதவிக்கு தமிழரசுக் கட்சியின் வைரமுத்து தினேஸ்குமார் 34 வாக்குகளில் 18 வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.