சிறிலங்காவின் அரச சட்டத்தரணிகளுக்கு பயிற்சி அளிக்கும் அமெரிக்கா
சிறிலங்காவின் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகளுக்கு அமெரிக்காவின் நீதித்துறைத் திணைக்களம் பயிற்சி அளித்து வருகிறது.
அரச சட்டத்தரணிகளின் விசாரணைத் திறன்களை வளர்ப்பதற்காக, அமெரிக்க நீதித்துறை சட்டமா அதிபர் திணைக்களத்தின் புதிய சட்டத்தரணிகளுடன் இணைந்து பணியாற்றுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சக்திவாய்ந்த தொடக்க மற்றும் இறுதி வாதங்களை வழங்குவது மற்றும் சாட்சிகளை விசாரணை செய்வது போன்ற திறன்கள் இதில் அடங்கும் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சட்டத்தரணிகள் விரைவில், போதைப்பொருள், மனிதர்கள் மற்றும் பிற சட்டவிரோத பொருட்களை கடத்துபவர்கள் தொடர்பான விசாரணைகளில் முன்னிலையாவார்கள் என்றும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
நாடுகடந்த குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைப்பது சிறிலங்கா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளினதும், நீதி, பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை பலப்படுத்துகிறது என்றும் அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் ‘திருடர்களைப் பிடிப்பதாக’ உறுதியளித்து ஆட்சிக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.