மேலும்

வேட்பாளர் அல்ல; எமக்கான தீர்வே முக்கியம் – ரணிலிடம் கூட்டமைப்பு திட்டவட்டம்

“ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளர் யார் என்பது எமக்கு முக்கியமில்லை, தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வே முக்கியமானது, அதன் அடிப்படையிலேயே முடிவுகளை எடுப்போம்” என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை, நாடாளுமன்றத்தில் உள்ள தனது செயலகத்தில், பிரதமர் ரணில்  விக்ரமசிங்க இன்று சந்தித்துப் பேசினார்.

இன்று பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்கிய இந்தச் சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்ததாக தெரியவருகிறது.

இதில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் கலந்து கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தவிர, இரா.சம்பந்தன் தலைமையிலான, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

இங்கு கருத்து வெளியிட்ட இரா.சம்பந்தன் “எந்தவொரு கட்சியின் வேட்பாளர்களையும் ஆதரிக்க இன்னமும் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை, நாம் முதலில் உங்களின் வேட்பாளர் யார் என்பதையே பார்க்கிறோம் .

முதலில் பிரதான கட்சிகள் அனைத்துமே தமிழ் மக்களின் விடயத்தில் என்ன நிலைப்பாட்டில் உள்ளீர்கள் என்பது கூறுவது பொறுத்தே,  எமது நிலைப்பாட்டை அறிவிப்போம்.

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் யார் வேட்பாளர் என்பது எமது பிரச்சினை அல்ல, உங்களில் யார் களமிறங்குவீர்கள் என்பதை விட, நீங்கள் தமிழ் மக்களின் நீண்டகால  அரசியல் பிரச்சினைக்கு முன்வைக்கு தீர்வு என்ன? அரசியல் அமைப்பை நிறைவுசெய்வீர்களா என்பதை கூறுங்கள்” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இரா. சம்பந்தன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, தான் எந்த சந்தர்ப்பத்திலும் தீர்வுகளை நோக்கியே பயணிக்க விரும்புகின்றேன் என்றும், அடுத்தமுறை ஆட்சியமைத்த ஒரு ஆண்டுக்குள் புதிய அரசியலமைப்பை கொண்டு வந்து, இனப்பிரச்சினையை தீர்த்து வைப்பேன் என்றும், நிச்சயமாக வாக்குறுதிகளை காப்பாற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன்போது, கல்முனை தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தல் வாக்குறுதிக்கு நடந்தது என்ன என்று கூட்டமைப்பு உறுப்பினர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், அதற்கான பணிகள் நடந்து வருகிறது, அந்த வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றும் மீண்டும் உறுதியளித்துள்ளார்.

ஒரு கருத்து “வேட்பாளர் அல்ல; எமக்கான தீர்வே முக்கியம் – ரணிலிடம் கூட்டமைப்பு திட்டவட்டம்”

  1. Prashanth Rasikarkal Yaalppanaam
    Prashanth Rasikarkal Yaalppanaam says:

    நம்பீட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *