மேலும்

பேரெழுச்சியுடன் யாழ். நகரில் எழுக தமிழ் பேரணி

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் இன்று எழுக தமிழ் எழுச்சிப் பேரணி நடைபெற்றது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், இந்தப் பேரணி இடம்பெற்றது.

இதனை முன்னிட்டு இன்று வடக்கு, கிழக்கு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்திருந்தது.

இதற்கமைய இன்று யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலும், அம்பாறை மாவட்டத்தின் தமிழ்ப் பகுதிகளிலும் முற்றாக இயல்புநிலை முடங்கிப் போனது.

பொதுப் போக்குவரத்துகள் இடம்பெறவில்லை, வணிக நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகை தரவில்லை. அரச செயலகங்களில் குறைந்தளவு பணியாளர்களே வந்திருந்தனர்.

எழுக தமிழ் பேரணியில் பங்கேற்க வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களில் இருந்தும், பேருந்துகளில் பொதுமக்கள் அழைத்து வரப்பட்டனர்.

இதையடுத்து, யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்தும், நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றிலில் இருந்தும் இரண்டு பேரணிகள் ஆரம்பமாகின.

இந்தப் பேரணிகளில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மத தலைவர்கள் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கு பற்றினர்.

பேரணி யாழ். முற்றவெளி மைதானத்தை நண்பகல் அளவில் சென்றடைந்தது. அங்கு கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் கூட்டம் ஆரம்பமானது.

மதத் தலைவர்களின் ஆசியுரைகளை அடுத்து, எழுக தமிழ் 2019 பிரகடனம், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் மருத்துவ கலாநிதி பூ.லக்ஸ்மனால் வாசிக்கப்பட்டது.

அதையடுத்து, பேரவையின் இணைத்தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்களின் உரைகளுடன், எழுக தமிழ் நிகழ்வு நிறைவுபெற்றது.

இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *