மேலும்

கோத்தாவின் பரப்புரைக்கு நிதியை கொட்டும் சீனா? – தெரியாது என்கிறார் பேச்சாளர்

வரும் அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவான பரப்புரைகளுக்கு சீனா பெருமளவில் நிதியை செலவிட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்கும் பரப்புரைகளுக்கான சீனா பெருமளவு நிதியை செலவிட்டு வருவதாக, அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.

அதிபர் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ச பல பாரிய கூட்டங்களை நடத்தியுள்ளார், அவற்றில் பெரும்பாலானவை மிகப் பெரியளவில் நடந்துள்ளன. இதற்கு பாரிய நிதி தேவைப்பட்டிருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

எனினும், கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவான பரப்புரைக்கு சீனா நிதியளிக்கிறதா என்பது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்று, அவரது வெற்றிக்கான பரப்புரைகளில் ஈடுபட்டுள்ள குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்படும் பெருமெடுப்பிலான பரப்புரைக்கு, சீனா நிதியளித்திருப்பதாக வெளியான தகவல்கள் குறித்து, கோத்தாபயவின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெலவிடம் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியிருந்தது.

அதற்கு அவர், சீனா தொடர்புபட்டுள்ளதா என்று தனக்குத் தெரியாது எனப் பதிலளித்துள்ளார்.

“எனினும், வணிக சமூகமும், ஏனைய துறைசார் நிபுணர்களும், ஆட்சி மாற்றம் ஒன்றை விரும்புகிறார்கள். தாம் எதிர்பார்க்கும் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர கோத்தாபயவுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். பல வணிகர்கள் தமது ஆசிகளை கோத்தாபய ராஜபக்சவுக்கு கொடுத்திருக்கிறார்கள்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைவரான மகிந்த ராஜபக்ச சீனாவுடன் மிக நெருக்கமான உறவுகளை பேணி வருகிறார். மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் சிறிலங்காவில் சீனா பல பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்திருந்தது.

அத்துடன், கடந்த அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக சீனா பெருமளவில் நிதியைச் செலவிட்டது என்று குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட போதும் அதனை சீனா நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *