மேலும்

முன்னாள் கடற்படை தளபதியிடம் விசாரணை – புலனாய்வு அதிகாரி கைதாகிறார்

கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும், குற்ற விசாரணைப் பிரிவினர், சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜயந்த பெரேராவிடம் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

குற்ற விசாரணைப் பிரிவின் சமூக கொள்ளைகள் விசாரணை அறைக்கு அழைக்கப்பட்டு, முன்னாள் கடற்படைத் தளபதியிடம் விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சிறிலங்கா கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் றியர் அட்மிரல் ஆனந்த குருகே விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் அவருக்கு தொடர்புகள், இருப்பதற்கான சான்றுகள் கிடைத்திருப்பதாக, குற்ற விசாரணைப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கடத்தப்பட்டு கொல்லப்பட்ட இரண்டு தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பதை, முன்னாள் கடற்படைத் தளபதிகளான அட்மிரல் வசந்த கரன்னகொடவும், அட்மிரல் ஜயந்த பெரேராவும், அறிந்திருந்தனர் என்றும், அதனை மூடி மறைக்க அவர்கள் முயன்றனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் குற்ற விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடத்தல்கள் நிகழ்ந்த போது, அட்மிரல் வசந்த கரன்னகொட கடற்படை தளபதியாக பதவியில் இருந்தார்.  கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரின், அலைபேசியில் கடற்படை தளபதியின் பெயரிலான இருந்த சிம் அட்டை பொருத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டே, அட்மிரல் வசந்த கரன்னாகொடவும்  இதனை அறிந்திருந்தார் என குற்ற விசாரணைப் பிரிவு கருதுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *