மேலும்

ரூபவாஹினியை வசப்படுத்தியது அரசியலமைப்பு மீறல் – சட்டநிபுணர்கள் கருத்து

சிறிலங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரும் வகையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன  வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பு, 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மீறுகின்ற செயல் என, சட்ட நிபுணர்களும், ஆய்வாளர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின்படி, சிறிலங்கா அதிபர் ஒருவர், பாதுகாப்பு மற்றும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சுக்கள் மற்றும் அதன் செயற்பாடுகளையே தன்வசம் வைத்திருக்க முடியும். அதுவும், தற்போதைய அதிபரின் பதவிக்காலம் முடியும் வரையான தற்காலிக ஏற்பாடு தான்.

எனினும், நேற்றுமுன்தினம் இரவு வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவிப்பின் மூலம் சிறிலங்கா அதிபர், ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்துள்ளார்.

இதுகுறித்து  வெரிற்றி ஆய்வு அமைப்பின் தலைவரான, கெஹன் குணதிலக கீச்சகத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில்,

”பாதுகாப்பு, மகாவலி மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான விடயங்கள் மற்றும் செயற்பாடுகளை மட்டுமே சிறிலங்கா அதிபரால் கையாள முடியும்.

19 ஆவது திருத்தச் சட்டத்தின் 51 வது பிரிவின் படி, எந்தவொரு பழைய விடயத்தையும் அல்லது செயற்பாட்டையும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வர அவருக்கு உரிமை அளிக்கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.

அதேவேளை. ரூபவாஹினியை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரும் அரசிதழ் அறிவிப்பு, ஜனநாயகத்துக்கும் ஊடக சுதந்திரத்துக்குமான பாரிய அச்சுறுத்தல் என்றும், இது ஒரு மோசமான முன்னுதாரணத்தை அமைத்து, நாட்டில் ஜனநாயக ஆட்சியின் உணர்வைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும் அரசியல் ஆய்வாளர் ரசிக ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *