மேலும்

சிறிலங்காவின் இறைமைக்கு பாதிப்பு வராது – அமெரிக்கா

சிறிலங்கா- அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உடன்பாடுகளால் சிறிலங்காவின் இறைமைக்கு எந்த பாதிப்பும் வராது என்றும்,  இங்கு அமெரிக்க படைகள் தளங்களை அமைக்கவோ, போர்த் தளபாடங்களை நிறுவவோ அனுமதிக்காது என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா முன்மொழிந்துள்ள சோபா உடன்பாட்டினால் சிறிலங்காவின் இறைமை மற்றும் சுதந்திரத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அதற்குத் தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

இதுகுறித்து, அமெரிக்க தூதரகப் பேச்சாளர் நான்சி வான்ஹோர்ன் கருத்து வெளியிடுகையில்,

“சிறிலங்கா தனது எல்லைக்குள்ளேயும், பிராந்திய கடல் மற்றும் வான்வெளியிலும்,  அமெரிக்க படையினர்,  கப்பல்கள், விமானங்கள் நுழைவதற்கு அல்லது வெளியேறுவதற்கு ஒப்புதல் அளிப்பதற்கும், மறுப்பதற்குமான அனைத்து இறையாண்மை உரிமைகளையும் கொண்டிருக்கும்.

சிறிலங்காவுக்கு பயிற்சிகள் மற்றும் அதிகாரபூர்வ கடமைகளுக்காக வரும்,  அமெரிக்க படையினர் மற்றும் சிவில் பணியாளர்கள் தொடர்பாக, அமெரிக்காவும், சிறிலங்காவும், 1995இல் உடன்பாடு ஒன்றை செய்திருந்தன.

இந்த உடன்பாட்டில், தொழில்முறை உரிமங்களின் பரஸ்பர அங்கீகாரம், அமெரிக்க இராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு திணைக்கள சிவில் பணியாளர்கள் சிறிலங்காவுக்கு எவ்வாறு வருகை தரலாம், வழங்கப்பட்ட ஆதரவு சேவைகளுக்கான கட்டணம் மற்றும் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் ஒப்பந்தக்காரர்களை பணியமர்த்துவதற்கான விதிமுறைகள் போன்றன உள்ளிட்ட சில  மேலதிக சிறப்புரிமைகளை உள்ளடக்கும் திருத்தங்களையே முன்மொழிந்திருக்கிறோம்.

இந்த உடன்பாட்டை புதுப்பிப்பதானது, ஏற்கனவே நடைமுறையில் உள்ள செயல்முறைகளை நெறிப்படுத்தும்

அத்துடன், பயங்கரவாத எதிர்ப்பு நடைமுறைகள், கடல்சார் பாதுகாப்பு மற்றும் பொதுவான அக்கறை கொண்ட பிற பிரச்சினைகள் விடயத்தில் சிறிலங்கா இராணுவத்துடன் ஒத்துழைக்க உதவும்.

இதுபோன்ற உடன்பாடுகளை அமெரிக்கா, பூகோள பங்காளர்களுடன் செய்து கொள்வது பொதுவான நடைமுறையாகும்.

உலகெங்கிலும் உள்ள 100 க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இதேபோன்ற உடன்பாடுகளை அமெரிக்கா செய்து கொண்டுள்ளது.

இந்த உடன்பாடுகள், பயிற்சிகள்,  ஒத்திகைகள் மற்றும் பரிமாற்றங்களுக்கு பரஸ்பரம் ஒப்புக்கொள்வதுடன், இரு நாடுகளின் நலன்களையும் உறுதிப்படுத்தும் வழக்கமான நிர்வாக நடைமுறைகளையும் இலகுபடுத்தும்” என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *