மேலும்

ரஷ்ய ஆயுதங்களை தடுக்கும் அமெரிக்கா – சுபத்ரா

ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்கு வெளியே 5ஆவது இராணுவ தொழில்நுட்ப கருத்தரங்கு – ‘இராணுவம் -2019’ (International Military and Technical Forum – ARMY 2019) என்ற பெயரில்,  நடந்து கொண்டிருந்த போது, கொழும்பில் ஊடக ஆசிரியர்களிடம், ரஷ்ய ஆயுத தளபாடங்களை வாங்குவதற்கு அமெரிக்கா தடை போடுவதாக குற்றம்சாட்டிக் கொண்டிருந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

மொஸ்கோவுக்கு வெளியே இராணுவம் -2019 பாதுகாப்புக் கருத்தரங்கு, கடந்த செவ்வாய்கிழமை ஆரம்பமாகியிருந்தது. இன்றுடன் அந்தக் கருத்தரங்கு முடிவடைகிறது.

இந்தப் பாதுகாப்புக் கருத்தரங்கில் ரஷ்ய பாதுகாப்பு தளபாட உற்பத்தி நிறுவனங்கள் பலவும் தமது தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தியிருக்கின்றன.

இந்த கருத்தரங்கிற்கு, இலங்கையில் இருந்து பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தலைமையிலான விமானப்படை, கடற்படை அதிகாரிகள் குழுவொன்று மொஸ்கோவுக்குச் சென்றிருந்தது.

இந்த பாதுகாப்புக் கருத்தரங்கின் போது, இலங்கைப் படையினருக்கான ஏ-47 வகை துப்பாக்கிகள், உள்ளிட்ட பல்வேறு சிறிய வகை ஆயுதங்களின் கொள்வனவு தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, ரஷ்யாவின் ஸ்புட்னிக் ஊடகம் கூறியிருந்தது.

இலங்கைப் படையினரிடம் குறிப்பாக, விமானப்படையிடம், ரஷ்ய தயாரிப்பு விமானங்களும், ஹெலிகொப்டர்களுமே அதிகமாக உள்ளன.

எம்.ஐ.17, எம்,ஐ- 24 ஹெலிகொப்டர்கள், அன்ரனோவ் – 32 விமானங்கள், மிக்- 27 போர் விமானங்கள் என்பன இலங்கை விமானப்படையின் பயன்பாட்டில் இன்றும் உள்ளன.

போர்க்காலத்தில், ரஷ்ய தயாரிப்பு விமானங்களின் மூலம், இலங்கைப் படையினர் அதிகளவு சாதகமான நிலையை எட்டியிருந்தன.

இப்போது, விமானப்படையிடம், ரஷ்ய தயாரிப்பு விமானங்கள், ஹெலிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. காரணம், முன்னர் கொள்வனவு செய்த விமானங்கள் பயன்படுத்தக் கூடிய காலத்தைக் கடந்து விட்டன என்பது ஒன்று. புதிய விமானங்களைக் கொள்வனவு செய்ய முடியாமல் இருப்பது இன்னொன்று.

இலங்கை விமானப்படை தற்போது தென்சூடானிலும், மத்திய ஆபிரிக்க குடியரசிலும், இரண்டு அணிகளை நிறுத்தியிருக்கிறது. அங்கு எம்.ஐ-17 ஹெலிகள் ஐ.நா அமைதிப்படையின் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.

ஐ.நா அமைதிப்படையில் விமானப்படையின் பங்கை மேலும் அதிகரிப்பதாயின், மேலதிக எம்.ஐ-17 ஹெலிகொப்டர்கள் தேவைப்படுகின்றன.

அத்துடன், ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளுக்குத் தேவையான PTR எனப்படும் துருப்புக்காவிகளையும், ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்வதற்காக பேச்சுக்கள் நடத்தப்பட்டன. ஆனால் இதுவரை அந்த முயற்சிகள் பேச்சுக்களைத் தாண்டி செல்லவில்லை.

அதுபோலவே, ரஷ்யாவிடம் இருந்து கடற்படையின் தேவைகளுக்காக, ஜிபார்ட் 5.1 எனப்படும் போர்க்கப்பலைக் கொள்வனவு செய்வது தொடர்பாகவும் பேச்சுக்கள் நடத்தப்பட்டிருந்தன. அதற்காக, ரஷ்யா கடனுதவித் திட்டங்களையும் ஏற்பாடு செய்வதாக கூறியிருந்தது.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு அறிவிக்கப்பட்ட 300 மில்லியன் டொலர் கடன் திட்டம், பயன்படுத்தப்படாமல் காலாவதியாகியிருந்தது.

அதனை மீளப் புதுப்பித்து, இலங்கைக்கு ஜிபார்ட் 5.1 வகை போர்க்கப்பலை விற்பனை செய்வதற்கு ரஷ்யா உடன்பட்டது, இதுகுறித்த பேச்சுக்களும் இப்போது முடங்கிப் போயிருக்கின்றன.

ரஷ்யாவிடம் இருந்து எம்.ஐ-17 ஹெலிகொப்டர்களையும், ஏ.கே – 47 துப்பாக்கிகளையும் கொள்வனவு செய்ய விருப்பம் கொண்டுள்ளதாக அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கூறியிருந்தாலும், அது நடக்குமா என்பது தான் சிக்கலான கேள்வி.

ஏனென்றால், ரஷ்யாவிடம் இருந்து ஆயுத தளபாடங்களைக் கொள்வனவு செய்வதற்கு அமெரிக்கா தடையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆறு மாதங்களுக்கு முன்னர், ரஷ்ய நிறுவனங்களின் பட்டியல் ஒன்றை அனுப்பிய அமெரிக்கா, அந்த நிறுவனங்களிடம் இருந்து ஆயுத தளபாடங்கள் எவற்றையும் கொள்வனவு செய்யக்கூடாது என்று இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்திருந்தது.

காரணம், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள தடை தான் இதற்குக் காரணம்.

கிரீமியா விவகாரத்தில், ரஷ்யா மீது, அமெரிக்கா கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் தடைகளை விதித்தது. ரஷ்ய நிறுவனங்கள் பல அமெரிக்காவின் தடைப் பட்டியலுக்குள் அகப்பட்டுக் கொண்டன. அவ்வாறு தடைப் பட்டியலில் உள்ளடக்கப்பட்ட நிறுவனங்களில் ஒன்று தான் ரஷ்யாவின்  Rosboronoexport நிறுவனம்.

அது ரஷ்ய அரசாங்கத்தின் சார்பில் போர்த்தளபாடங்களை ஏற்றுமதி செய்வதற்கான உருவாக்கப்பட்டது. அந்த நிறுவனத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையினால், ரஷ்யாவிடம் இருந்து, எம்.ஐ-17 ஹெலிகொப்டர்களையோ, போர்க்கப்பல்கள் உள்ளிட்ட ஏனைய போர்த்தளபாடங்களையோ கொள்வனவு செய்ய முடியாமல் இருக்கிறது.

அதுமாத்திரமன்றி, குறிப்பிட்ட காலம் பயன்படுத்தப்பட்டு விட்ட நிலையில் மறுசீரமைத்துப் புதுப்பிக்கப்பட வேண்டிய போர் விமானங்கள், ஹெலிகொப்டர்களையும் கூட, முடக்கி வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், கடற்படை போதுமானளவுக்குப் பலப்படுத்தப்பட்டிருந்தாலும், விமானப்படை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. மிக், கிபிர் போர் விமானங்களில் பெரும்பாலானவை பயன்பாட்டில் இருந்து ஒதுக்கப்பட்டிருக்கின்றன. எம்.ஐ-24 ஹெலிகொப்டர்களில் அதிகமானவற்றின் நிலையும் அது தான்.

இவ்வாறான நிலையில், விமானப்படைக்கு புதிய போர் விமானங்களைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று புதிய விமானப்படைத் தளபதியாக பொறுப்பேற்ற எயர் மார்ஷல் சுமங்கல டயசிடம், பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்திருந்தார்.

அண்மையில் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்த Paris Air Show 2019 கண்காட்சியில் பங்கேற்றிருந்த இஸ்ரேலின் IAI நிறுவனம், கிபிர் போர் விமானத்தின் மிகப் பிந்திய வடிவமான, கிபிர் அடுத்த தலைமுறை (Kfir NG) போர் விமானத்தை காட்சிப்படுத்தியிருந்தது.

அதனை இலங்கை, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளுக்கு விற்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக இஸ்ரேலிய நிறுவன அதிகாரிகளை மேற்கொள்காட்டி ஜேன்ஸ் பாதுகாப்பு சஞ்சிகை தகவல் வெளியிட்டிருந்தது.

இலங்கை விமானப்படையிடம் உள்ள கிபிர் போர் விமானங்களை தரமுயர்த்தி, மறுசீரமைத்துக் கொடுக்கும் திட்டத்துடன் இஸ்ரேல் இருக்கும் நிலையில் தான், பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தக் கருத்தை கூறியிருந்தார்.

அதேவேளை, ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், மொஸ்கோவுக்குச் சென்று “இராணுவம் 2019“ பாதுகாப்புக் கருததரங்கில் ரஷ்யப் போர்த்தளபாடங்களைக் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்புகளைப் பற்றி பேசியிருக்கிறார்கள்.

ரஷ்யாவும் இலங்கையும் ஏற்கனவே பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பான உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. இருதரப்புகளும், போர்த்தளபாடக் கொள்வனவுகள் பற்றி பலமுறை பேச்சுக்களை நடத்தியிருந்தன.

இப்போது, இராணுவம் -2019 கருத்தரங்கிற்கு சென்றிருந்த அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தலைமையிலான குழுவினரைச் சந்தித்துப் பேசிய ரஷ்ய இராணுவத் தலைமை அதிகாரி ஜெனரல் வலேரி ஜெராசிமோவ், தெற்காசியாவில் ரஷ்யாவின் நம்பகமான பங்களராக இலங்கையை கருதுவதாகவும், இலங்கையுடனான இராணுவ ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்வதற்கு ஆர்வம் கொண்டிருப்பதாகவும், கூறியிருந்தார்.

ஆனாலும் அமெரிக்காவின் தடைகளால் ரஷ்யாவினால் இலங்கைக்கு ஆயுதங்களை விற்க முடியாத நிலையே காணப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தஜிகிஸ்தான் சென்றிருந்த போது, அங்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

இந்தப் பேச்சுக்களின் போது, ரஷ்யாவிடம் ஆயுத தளபாடங்களைக் கொள்வனவு செய்வதற்கு அமெரிக்கா தடை போடுவதாக முறையிட்டிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

அமெரிக்காவின் தடையை மீறி ஆயுதங்களைக் கொள்வனவு செய்தால், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புகளிடம், இருந்து கிடைக்கக் கூடிய நிதியுதவிகள், கடன்களை அமெரிக்கா நிறுத்தி விடும் என்று ரஷ்ய ஜனாதிபதியிடம் அச்சத்தை வெளியிட்டிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

இந்தச் சிக்கலுக்கான தீர்வையும் முன்வைக்குமாறு ரஷ்ய ஜனாதிபதி புட்டினிடம் தான் கோரியிருப்பதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கிறார்.

அமெரிக்காவிடம் இருந்து விலகிச் செல்லத் தொடங்கியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஷ்யாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்துவதில் கணிசமான முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறார்.

குறிப்பாக ரஷ்யாவுக்கான தூதூவராக தயான் ஜயதிலக நியமிக்கப்பட்டதன் பின்னணியிலேயே இந்தச் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது,

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பின்னர், கடந்த மே மாத நடுப்பகுதியில், ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜெனரல் ஒலேக் சைரோமோலோரோவ்வுடன், தயான் ஜயதிலக, பேச்சு நடத்தியிருந்தார்.

ரஷ்ய இராணுவத்தின் ஜெனரல் தர நிலையில் உள்ள  பிரதி வெளிவிவகார அமைச்சர் ஒலேக் சைரோமோலோரோவ், சோவியத் ஒன்றிய காலத்தில் கேஜிபி என அழைக்கப்பட்டு பின்னர், எவ்எஸ்பி எனப்படும், ரஷ்ய சமஷ்டி புலனாய்வு சேவை அமைப்பின், பிரதி பணிப்பாளராக இருந்தவர்.

இருபதாண்டுகள் எவ்எஸ்பியில் உயர் பதவியில் இருந்த அவர், டிகேஆர் எனப்படும், புலனாய்வு முறியடிப்புப் பிரிவின் தலைவராகவும் 2004 தொடக்கம் 2015 வரை பணியாற்றியவர்.

அவருடன் தயான் ஜயதிலக நடத்திய பேச்சுக்களின் போது, உள்நாட்டு மற்றும்  சர்வதேச தீவிரவாதம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

1990களில் ரஷ்யாவில் தொண்டர் நிறுவனங்களின் மூலம் பரவிய வகாபியிசம் மற்றும் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் ரஷ்யா எதிர்கொண்ட எதிர்மறையான அனுபவங்களையும் அந்த நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் இந்தச் சந்திப்பின் போது எடுத்துரைதிருந்தார்.

இந்தச் சந்திப்பின் மூலம், இலங்கைக்கான பாதுகாப்பு நிபுணத்துவ உதவிகளை ரஷ்யா வழங்கும் என்றும் எதிர்பார்ப்புகள் உருவாகியிருக்கின்றன.

ஆனால், ரஷ்யாவுடனான இலங்கையின் நெருக்கம் அமெரிக்காவுக்கு உறுத்தலாக, வெறுப்பாக இருக்கிறது. இந்தச் சிக்கலான நிலையை, இலங்கை அரசாங்கம் எதிர்கொள்வது கடினமானது.

அமெரிக்காவுடன் முரண்பட்டுக் கொண்டு ரஷ்யாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்த முனையும் போது, இலங்கைக்கு பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தக் கூடும்.

-சுபத்ரா

நன்றியுடன் – வீரகேசரி வாரவெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *