மேலும்

சிறிலங்காவுக்கு மேலதிக இராணுவ உதவி – 30 மில்லியன் டொலர் கோருகிறது ட்ரம்ப் நிர்வாகம்

தெற்காசிய நாடுகளில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளும் வகையில், சிறிலங்கா, பங்களாதேஷ், மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு, 30 மில்லியன் டொலரை, வெளிநாட்டு இராணுவ நிதி உதவியாக  வழங்குவதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியைக் கோரியுள்ளது டிரம்ப் நிர்வாகம்.

வங்காள விரிகுடா பாதுகாப்பு முன்முயற்சி என்ற பெயரிலேயே, அமெரிக்க அரசாங்கம் இந்த நிதியுதவியைக் கோரியுள்ளது.

பிராந்தியத்தில் பல்வேறு உட்கட்டமைப்புத் திட்டங்களுக்காக கோரியுள்ள, 64 மில்லியன் டொலருக்கு மேலதிகமாக இந்த நிதி ஒதுக்கீட்டுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.

காங்கிரஸ் உபகுழு முன் கோரிக்கை

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், தெற்காசியாவுக்கான புதிய பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டத்துக்கு, அமெரிக்க காங்கிரசின் ஆதரவை கோரியுள்ளோம். சிறிலங்கா, பங்களாதேஷ், மாலைதீவு ஆகிய நாடுகளின், கடல்சார்  மற்றும் எல்லைப் பாதுகாப்பு ஆற்றலை கட்டியழுப்புவதற்காக, வெளிநாட்டு இராணுவ நிதிஉதவியாக, 30 மில்லியன் டொலரை வழங்குவதற்கு அனுமதி கோருவதாக, தெற்கு மத்திய ஆசியாவுக்கான, அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர், அலிஸ் வெல்ஸ் அம்மையார் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க காங்கிரசின், ஆசிய- பசுபிக் பிராந்தியத்துக்கான வெளிவிவகார உபகுழுவின் முன்பாக நேற்று விளக்கமளிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ட்ரம்ப் அரசின் கடப்பாடு

“இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில், சட்டத்தின் அடிப்படையிலான ஒழுங்கு, சுதந்திரமான, திறந்த வணிகம், சுதந்திரமான கப்பல் போக்குவரத்து, ஜனநாயகம், பிரச்சினைகளுக்கு அமைதியான தீர்வு ஆகியவற்றை உறுதிப்படுத்த ட்ரம்ப் நிர்வாகம்,  கடமைப்பட்டுள்ளது.

இந்தக் கொள்கைகள், உலகின் சனத்தொகையில் பாதியளவு மக்கள் வாழுகின்ற இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கு உதவும்.

உலக வணிகத்தின் 70 வீதமான பகுதி, இந்தோ-பசுபிக் பெருங்கடல்கள் வழியாகவே, செல்கிறது.

கடல்களையும், வானையும் அமெரிக்கா பாதுகாக்கும்

எமது இராஜதந்திர முயற்சி, அபிவிருத்தி முயற்சிகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு மூலம், இந்தக் கடல்களையும் வான்பரப்பையும், அமெரிக்கா பாதுகாக்கும்.

அதேவேளை, இந்தியா, ஜப்பான், அவுஸ்ரேலியா மற்றும் ஏனைய நம்பத்தகுந்த கூட்டாளிகள் மற்றும் பங்காளர்களுடன் இணைந்து, அவர்கள் தமது சொந்தப் பாதையில் சுதந்திரத்தையும், செழிப்பையும் உறுதிப்படுத்துவதற்கு இந்தோ-பசுபிக் நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதார சுயாட்சிக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும்.

சீனாவை அனுமதிக்க முடியாது

நிலையற்ற உட்கட்டமைப்பு திட்டங்களின் மூலம், எமது பங்காளிகளை அழிப்பதற்கு சீனாவையோ அல்லது வேறு எந்த நாட்டையும் அனுமதிக்க முடியாது. அது, பொருளாதாரத்தைக் கடன்களுக்குள் தள்ளும். அல்லது, வெளிப்படைத்தன்மை மற்றும் ஜனநாயக நெறிமுறைகளை பாதிக்கும்.

சிறிலங்காவுடன் இணைந்து நிற்கிறது

சிறிலங்காவில் அண்மையில் நடந்த தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுடன் அமெரிக்கா இணைந்து நிற்கிறது, அதன் தீவிரவாத முறியடிப்பு ஆற்றலைப் பலப்படுத்துகிறது.

சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கையை அடுத்து,எவ்பிஐ துரிதமாக அங்கு சென்றது. தாக்குதல்களை மேற்கொண்ட உள்ளூர் தீவிரவாத அமைப்புகளை செயலிழக்கச் செய்வதற்கு உதவியது.

அனைத்துலக தீவிரவாதத்தை சிறிலங்கா எதிர்க்கின்ற நிலையில். இப்போது நாங்கள் சிறிலங்கா அரசாங்கத்தை ஆதரிப்பதற்கான வழிகளை மதிப்பீடு செய்கிறோம். மனித உரிமைகளை மதிக்க வேண்டியதன் அவசியத்தை சிறிங்காவுக்கு வலியுறுத்துவோம்.” என்றும் அவர் தெரிவித்தார்.

இன்றும் ஒரு அமர்வு

அதேவேளை, அமெரிக்க காங்கிரசின், ஆசிய- பசுபிக் பிராந்தியத்துக்கான வெளிவிவகார உபகுழு, தெற்காசியாவில் அமெரிக்க நலன்கள் மற்றும் 2020 நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தொடர்பாக, இன்று கருத்தறியும் அமர்வு ஒன்றை நடத்தவுள்ளது.

இரண்டு மடங்கு நிதி கோருகிறது

2020 நிதியாண்டில் தெற்காசியாவுக்கு, பிராந்திய பொருளாதார மற்றும் பாதுகாப்பு உதவிக்காக, 468 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீட்டை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கோரியுள்ளது. இது, 2019இல் கோரப்பட்ட தொகையை விட இரண்டு மடங்காகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *