மதம் பிடித்த பிராந்தியங்கள் -3
பிராந்திய ஏகாதிபத்திய அரசியலில் மத்திய கிழக்கை இஸ்ரேல் தனது கட்டுக்குள் வைத்திருக்க முனையும் அதேவேளை, தெற்காசிய அரசியலில் இந்திய பிராந்திய வல்லரசு தனது மேலாண்மையை நிச்சயப்படுத்த முனைகிறது.
இந்த வியூகத்தை மையமாக கொண்டு இரு பிராந்தியங்களிலும் மதம் உள்நாட்டு சமூக பிரிவுகள் மத்தியில் எழுச்சி ஊட்டும் உபாயமாக ஆங்காங்கே தேசங்களுக்கு ஏற்ற வகையில் பயன் படுத்தப்படுகிறது
சமூகங்கள் மத்தியில் இருக்கக் கூடிய மத வேறுபாடுகளை ஏகாதியத்திய சிந்தனையாளர்கள் கையாளுகின்றனர். தமது பாதுகாப்பான இருப்பை மையமாக கொண்டு, சர்வதேச வல்லரசுகள் ஏகாதியத்திய பிராந்திய கூட்டு கோட்பாடுகளை மையமாக கொண்டு, மத அடிப்படையிலான வேற்றுமை மற்றும் எழுச்சி ஊட்டலுக்கு துணை போகின்றன.
அதிலும் பல்வேறு படிகள் மேலாக அதீத பலன்களை அடையும் முகமாக பல தசாப்தங்களுக்கு மத வேற்றுமையை வளர்த்தலில் வியூகம் அமைத்து செயலாற்றுகின்றன.
மேலும் யுத்தநோக்கு கொண்ட நகர்வுகளை செய்வதன் ஊடாக சர்வதேச வல்லரசுகள் ஆயுத வியாபார பொருளாதாரத்தை வளம் பெற வைத்தல், எதிர் பிராந்திய கூட்டுகளை யுத்த செலவீனத்திற்குள் உள்ளாக்குவதன் மூலம் எதிர்தரப்பின் பொருளாதார வளத்தை சிதைத்தல் ஆகியவற்றை மையமாக கொண்டு தாம் இயற்றிய சர்வதேச சட்ட திட்டங்களையே மீறும் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன
இந்த வல்லரசுகளின் அரசியல் நகர்வுகள் குறித்தும், பிராந்திய வல்லரசுகள் தமது பிராந்தியத்தில் நேரடியாக யுத்த நடவடிக்கைகளில் ஈடுபடாது முகவர்களுடாக தமது நோக்கங்களை அடைவதில் ஆர்வமாக உள்ளன என்பது குறித்தும் கடந்த கட்டுரைகளில் கண்டிருந்தோம் .
இவ்வாரம் வெளிவந்திருக்கும் கட்டுரையில் பிராந்திய நகர்வுகள் எவ்வாறு கோட்பாடு ரீதியாக ஒருமித்த தன்மையை கொண்டிருக்கின்றன என்று பார்ப்பதன் மூலம் சர்வதேச நிகழ்வுகளாக நடக்கும் பல்வேறு விடயங்களும் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று பிணைந்து செல்கின்றன என்பதை காண முடியும்
இந்த ஒருமித்த தன்மையை காணும் விடயத்தில் பல தனிமங்கள் ( இவை அமைப்புகளாகவோ அல்லது தேசிய இனங்களாகவோ அல்லது தனிநபர்களாகவோ அரசியல் கட்சிகளாகவோ இருக்கலாம் ) நேரடி முகவர்களாக தென்படாது போனாலும் அவர்கள் பல இடங்களில் சித்தாந்த முகவர்களாக செயலாற்றும் தன்மையையும் காணலாம் .
பிராந்திய கோட்பாடு
ஒரு அரசு அதிக ஆதிக்கத்தை குறிப்பிட்ட ஒரு பிராந்தியத்தில் கொண்டிருக்கும் பொழுது, சிறிய வலு குறைந்த நாடுகள் தமது இருப்பில் அதிக கவனம் செலுத்தும் மனோ நிலையை பெறுகின்றன. அந்த சிறிய நாடுகளுக்கு பாதுகாப்பு இன்மை குறித்த எண்ணக்கருத்தின் ஆரம்ப பொருளாக அதிக ஆதிக்கத்தை கொண்ட நாட்டின் செயற்பாடுகள் அமைகின்றன.
சமச்சீரற்ற தோற்றப்பாடு குறிப்பாக மூலோபாய நிலைகளாயினும் ,இராணுவ பாதுகாப்பு வளங்களாயினும் பொருளாதார வலு எனஆதிக்கம் செலுத்தக்கூடிய எந்த காரணியாயினும் இந்த பாதுகாப்பு அற்ற எண்ணப்பாட்டை ஏற்படுத்தி விடுகிறது.
தெற்காசிய பிராந்தியத்தின் பிரதான இந்திய நாட்டிற்கும் அதனை அயல் நாடாக கொண்ட பாகிஸ்தான், பங்களாதேசம்,சிறிலங்கா, மாலைதீவு போன்ற நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு அசெளகரீயங்களை உள்ளூர உணர்ந்து வரும் நிலையும் அரசியல் பதட்ட நிலையும் எப்பொழுதும் இருந்து வருகிறது.
இந்த பதட்ட நிலை மறுவளமாகவும் செயற்பட வல்லது. அதாவது சிறிய நாடுகளில் ஏற்படக் கூடிய உள்ளுர் அரசியல் மாற்றங்களும் பெரிய அயல் நாடான இந்திய பாதுகாப்பு செளகரீய உணர்வுக்கு ஏற்றதல்ல.
உதாரணமாக சிறிலங்காவில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு அதே காலப்பகுதியில் இடம்பெற்ற இந்திய தேர்தல் களத்தில் பெரும் பீதியை ஏற்படுத்தி இருந்தது. ஆளும் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர்கள் இஸ்லாமிய அபாயம் நெருங்கி வருவதாக பிரச்சாரம் செய்வதற்கு பெரும் வாய்ப்பளித்தது.
அதேபோல பாகிஸ்தானிய அரசியல் பொருளாதார மாற்றம் துல்லியமான வகையில் உடனடியாக இந்தியாவில் நிலவர மாற்றத்தை காட்ட வல்லது. இதற்கு நல்ல உதாரணமாக சீன -பாகிஸ்தானிய பொருளாதார ஒழுங்கை ஒப்பந்தமும் அதில் இந்தியா கொண்டுள்ள ஐயப்பாடுகள் குறித்தும் எழுந்துள்ள பிரச்சினைகளை குறிப்பிடலாம்.
அராபிய பார்சிய இன மக்களை அதிகம் கொண்டுள்ள பாகிஸ்தான் இஸ்லாத்தை தனது தேசிய மதமாக கொண்டுள்ளது. 82 சத வீத சுண்ணத்து இஸ்லாமியரையும், 11.8 சதவிகிதம் சியா இஸ்லாத்தையும் கொண்டுள்ளது. பாகிஸ்தானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையில் மிக நெருங்கிய உறவு நிகழ்ந்து வந்தது.
இரு நாடுகளும் சுண்ணத்து இஸ்லாத்தை தழுவுபவர்களாக இருப்பதால், பொருளாதார மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் அதிக உறவு கொண்டாடி வந்தனர்.
இரண்டு வரலாற்று ரீதியான நிகழ்வுகள் சவுதி அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிக நெருக்கத்தை உருவாக்கின. முதலாவது 1979 ஆம் ஆண்டு நடை பெற்ற ஈரானிய புரட்சி. ஈரானில் சியா இஸ்லாமியர்களின் எழுச்சி சுண்ணத்து இஸ்லாமிய பாகிஸ்தான் மீது அதிக கவனம் செலுத்த வைத்தது.
இரண்டாவதாக அதே ஆண்டு இடம் பெற்ற ஆப்கனிஸ்தான் மீதான சோவியத் படைகளின் நகர்வு பாகிஸ்தானிய இஸ்லாத்தை காப்பாற்றும், பொருட்டு மதராசா பள்ளி கூடங்கள் ஊடாக சவுதி அரேபியா பொருளாதார வசதிகள் செய்து கொடுத்தது.
2015இல் யேமன் நாட்டின் மீது சவுதி அரேபியா படை எடுத்த போது, ஈரானிய சார்பு கவுட்டி படைகளுக்கும் சவுதி அரேபிய படைகளுக்கும் இடையில் பாகிஸ்தான் நடு நிலைமை வகித்தது. ஆனால் பின்பு சவுதி அரேபியாவின் அழைப்பிற்கு ஏற்ப பாகிஸ்தானிய இராணுவத்தை நேரடி யுத்தம் அல்லாத பகுதிகளில் சவுதி அரேபிய தேசிய ஒருமைப்பாட்டிற்கு உதவும் வகையில் யுத்தப் பகுதிகள் அல்லாத பிரதேசங்களில் பணியாற்ற படைகளை அனுப்புவதற்கு ஒப்பு கொண்டது
அத்துடன் கடந்த பெப்ரவரி மாதம் பாகிஸ்தானுக்கும் வந்திருந்த சவுதி இளவரசர் 20 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இருதரப்பு இணக்க உடன் படிக்க செய்து கொண்டதிலிருந்து பாகிஸ்தானிய சவுதி உறவுகள் மேலும் வலுப்பெற்று உள்ளது.
தாக்குதலும் சவுதி இளவரசரும்
காலாகாலம் சவுதி அரேபியாவினால் வழங்கப்படும் தாராள பொருளாதார உதவிகள் சவுதி ஆளும் வர்க்க வொகாபிஸ்களுடன் இணைந்து செல்லக்கூடிய தூய இஸ்லாமியம் என்ற பெயரிலான- ஈரானியர்களுக்கு எதிரான வகையில் கட்டுக்குள் வைத்து கொள்ளக் கூடிய வகையிலான- ஒரு நிலையை சவுதி அரேபியாவினால் பாகிஸ்தானில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு ஒரு நல்ல உதாரணமாக, இந்திய தேர்தலுக்கு சற்று முன்பாக இடம் பெற்ற புல்வாமா தாக்குதல்களும் அதனை இந்திய- பாகிஸ்தானிய -சவுதி அரேபிய கூட்டு எவ்வாறு செயல்படுத்தியது என்பதை காணலாம் .
புல்வாமா தாக்குதலும், அதிலே இறந்த இந்திய இராணுவத்தினரும் அதனை தொடர்ந்து இந்திய விமானப்படையின் பாகிஸ்தானிய எல்லையை மீறி சென்று நடத்திய தாக்குதல்களும் இந்திய தேர்தலை மையமாக கொண்டு இடம் பெற்றவையே என்பது இங்கே வெளிச்சமாகிறது.
ஏற்கனவே திட்டமிட்டபடி சவுதி இளவரசர் இந்திய – பாகிஸ்தானிய பயணத்தை மேற்கொண்டிருந்தார். இந்த பயணத் திட்டத்திற்க ஏற்ப தாக்குதல் நாடகம் அரங்கேற்றப்பட்டது மட்டுமல்லாது. இதன் பலனாக நீண்ட கள மோதல் ஒன்று இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இடம் பெறாது பாதுகாக்கப்பட்டது என்பது முக்கியமானதாகும்.
சவுதி இளவரசர் இந்திய வருகை இந்த திட்டத்தை சமநிலைபடுத்தியது. இதிலே சுவுதி அரேபியாவின் பங்களிப்பு எந்த அளவு என்பது சரியாக குறிப்பிட முடியாது போனாலும் அனைத்து நிகழ்வு களும் காலம் தவறாது இடம் பெற்றன என்பது மட்டும் உண்மை.
அத்துடன் இந்திய மக்கள் மத்தியில் மோடி அவர்கள் ஒரு பாதுகாவலன் என்ற ஒரு பிரம்மையை உருவாக்கும் பொருட்டு தான் இந்த தாக்குதல் இடம் பெற்றது என்பதுவும் வெளிவருகிறது.
பணமும் குற்றவாளிகளும்
900 மில்லியன் வாக்காளர்கள் பங்குபற்றிய அண்மைய இந்திய தேர்தல் உலகிலேயே மிகவும் அதிக செலவீனம் கொண்ட தேர்தல் என புதுடெல்லியை மையமாக கொண்டு இயங்கக் கூடிய தகவல் தொடர்பு கற்கைகளுக்கான மையம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே 60 000 கோடி இந்திய ரூபா செலவிடப் பட்டிருக்கிறது. இது சுமார் 8.7பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இணையானது என்பது மட்டுமல்லாது, 2014 ஆம் ஆண்டு இடம் பெற்ற தேர்தல் செலவீனங்ளிலும் பார்க்க இது இரண்டு மடங்க அதிகமானது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது .
இப்பொழுது தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி மகத்தான வெற்றி இந்துத்துவா என்று ஆங்கிலத்தில் அழைக்க கூடிய இந்து அடிப்படைவாத கோட்பாட்டிற்கு புதிய ஒரு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
இங்கே ஒட்டு மொத்தமாக 539 பாராளுமன்ற உறுப்பினாகள் தெரிவு செய்யப்ட்டனர். இவர்களில் 233 பேர் மீது கற்பழிப்பு, கொலை கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்முறை போன்ற குற்ற சாட்டுகள் உள்ளதாக சனநாயக சீர்திருத்த அமைப்பு என்ற ஒரு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதாவது அரைவாசி பேர் குற்ற விசாரணைக்குட்பட்டவர்களாகவோ அல்லது சட்டத்தை ஏய்த்தவர்களாகவோ உள்ளனர் என்பது அந்த நிறுவனத்தின் அறிக்கையாகும். இதிலே பாஜக வை சேர்ந்தவர்கள் 116 பேர் எனவும் தெரிவு செய்யப்பட்ட 54 காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களில் 29 பேர் குற்றவாளிகளாக கருதப்படுபவர்கள் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் இருந்து முக்கியமான துறைகளான பொருளாதாரம் வெளியுறவு ஆகியவற்றிற்கு அமைச்சர்களை தெரிந்து எடுக்க முடியாமல் இருவரையும் தமிழ் நாட்டிலிருந்து தெரிவு செய்திருப்பதுவும் யதார்த்தம் தான்.
இருப்பினும் தெற்காசிய பிரந்திய நாடுகள் மத்தியில் மத உணர்வை மையமாக வைத்து அரசியல் செய்யும் தன்மை இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இரண்டிலும் மிக அதிகமாக காணப்படுகிறது என்பது மட்டும் உண்மை.
அடுத்த கட்டுரையில் எவ்வாறு இந்திய -இலங்கை நாடுகளுக்கு இடையிலான பௌத்த உறவு அரசியல் மற்றும் வெளியுறவு சார்ந்தது. சிறிலங்காவின் பௌத்தம் தனது இருப்பை அந்த தீவில் உத்தரவாதம் செய்து கொள்ளும் பொருட்டு எந்த வகையிலும் நிறம் மாறி கொள்ளும் போக்கு கொண்டது என்பதையும் முன்பு என்றும் இல்லாதவாறு பௌத்த சிங்களம் எவ்வாறு தனி ஆதிக்கம் செலுத்துகிறது என்றும் பார்க்கலாம்.
–லண்டனில் இருந்து லோகன் பரமசாமி