மேலும்

கொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டம் – கைகோர்க்க இந்தியா முடிவு

சிறிலங்காவில் சீனாவின் செல்வாக்கை சமப்படுத்தும் வகையில், ஜப்பான் மற்றும் சிறிலங்காவுடன் இணைந்து கொழும்பு துறைமுக விரிவாக்கத் திட்டத்தை முன்னெடுக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள பாஜக அரசாங்கத்தின் முதலாவது வெளிநாட்டு கொள்கை நகர்வாக இந்த முடிவு அமைந்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்க, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இது, மூன்று நாடுகளும் இணைந்து முன்னெடுக்கவுள்ள கொழும்பு துறைமுக நகர திட்டத்தை முன்னெடுக்கும் விடயத்துக்கு ஊக்கமாக அமையும் என்று இந்திய ஆங்கில நாளிதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் கையாளும் திறனை அதிகரிப்பதே இந்த முத்தரப்பு திட்டத்தின் நோக்கமாகும்.

பிராந்தியத்தில் சீனா பல்வேறு திட்டங்களின் மூலம், தனது செல்வாக்கை உயர்த்தி வருகின்ற நிலையிலேயே இந்த திட்டத்தை கூட்டாக முன்னெடுக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

திருகோணமலை துறைமுகத்தை கூட்டாக அபிவிருத்தி செய்யும் விடயத்திலும், ஜப்பானும் இந்தியாவும் கண் வைத்துள்ளன.

கொழும்பு துறைமுகத்தின் தெற்குப் பகுதியில் உள்ள கிழக்கு கொள்கலன் முனையத்தை மூன்று நாடுகளும் கூட்டாக அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளன. இதன் மூலம், பாரிய கொள்கலன் கப்பல்கள் வரும் வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த திட்டம் தொடர்பாக மூன்று நாடுகளின் அரசாங்கங்களும் பேச்சுக்களை நடத்தி வருகின்றன. இந்த பேச்சுக்களின் எட்டப்படும் இணக்கப்பாடுகளின் அடிப்படையில், அடுத்த சில மாதங்களுக்குள் உடன்பாடு கையெழுத்திடப்படும்.

இந்த திட்டத்துக்கு தனியார் துறை பங்களிப்பும் கோரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *