சிறிசேன படுகொலைச் சதி – இந்தியரை விடுவித்தது நீதிமன்றம்
சிறிலங்கா அதிபர் உள்ளிட்ட உயர்மட்டப் பிரமுகர்களைப் படுகொலை செய்யும் சதித்திட்டத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியர் இன்று கோட்டை நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நாமல் குமாரவின் முறைப்பாட்டின் பேரில், கேரளாவைச் சேர்ந்த மேர்சிலி தோமஸ் என்ற இந்தியர், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும், சதித்திட்டம் தொடர்பாக நடத்தப்பட்டுள்ள விசாரணைகளின் அடிப்படையில் அவர் மீது மேலதிக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படாது என்று கோட்டை பதில் நீதிவான் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவரை விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டார்.
எனினும், குறித்த இந்தியர் சிறிலங்காவின் குடிவரவுச் சட்டத்தை மீறினார் என்பதால், அவரை மார்ச் 13ஆம் நாள் வரை தொடரந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.