மேலும்

அட்மிரல் கரன்னகொடவின் கடவுச்சீட்டு முடக்கம் – எந்த நேரத்திலும் கைதாவார்

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவின் கடவுச்சீட்டை முடக்கி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில்,  2008-09 காலப்பகுதியில் 11 இளைஞர்கள், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கிலேயே அட்மிரல் கரன்னகொட கைது செய்யப்படவுள்ளார்.

கொலை செய்ய சதித் திட்டம் தீட்டினார் என்பது உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இதில் கொலைச் சதித்திட்டத்துக்கு மரணதண்டனை தீர்ப்பு அளிக்கப்படக் கூடியதாகும்.

குற்றவியல் சட்டக்கோவையின் 296 மற்றும் 338 ஆவது பிரிவுகளுக்கு அமைய குற்றங்களைச் செய்வதற்கு சதித் திட்டம் தீட்டினார் என்றும்,   199, 200 ஆவது பிரிவுகளின் கீழ், குற்றம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளிக்கத் தவறினார் என்றும்,  தவறாக வழிநடத்தும் வகையில் தகவல்களை அளித்தார் என்றும் அட்மிரல் வசந்த கரன்னகொட, மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அட்மிரல் கரன்னகொடாவுடன் நேரடியாக தொடர்புபட்டிருந்த கடற்படையினர் எவ்வாறு செல்வந்த வணிகர்களின் குடும்பங்களின் பிள்ளைகளைக் கடத்திச் சென்று, கப்பம் பெற்ற பின்னர் அவர்களைக் கொலை செய்தனர் என்ற விபரங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த வழக்கில் அட்மிரல் கரன்னகொட 14 ஆவது சந்தேக நபராக சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லக் கூடும் என்று நேற்று முன்தினம் கோட்டை நீதிவான் ரங்க திசநாயக்கவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முறையிட்டதை அடுத்து, அட்மிரல் கரன்னகொடவின் கடவுச்சீட்டை முடக்கி வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் அட்மிரல் கரன்னகொடவைத் தேடி வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டை விட்டு வெளியேறும் அனைத்து துறைமுகங்கள், விமான நிலையங்களையும் உசார்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *