மேலும்

தெற்காசியாவின் நட்சத்திரம் –2

இலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம் உலகிலேயே மிகவும் சிறந்த துறைமுகங்களில் ஒன்று என்பது பல்வேறு கடல்சார் ஆய்வுகளின் முடிவாகும். 

இயற்கையாகவே துறைமுகத்திற்கு ஏற்ற கடற் புவியியல் அமைப்பை கொண்டுள்ள இந்த துறைமுகம் யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்பிற்கும் நடுவே அமைந்திருப்பது தமிழ் பேசும் மக்களின் சுற்றாடல் ஆளுமைக்குள்  நிலை பெற்றுள்ளது.

திருகோணமலையின் முக்கியத்துவம்

இந்து சமுத்திரத்தின்  கிழக்கு கடற்பரப்பின் முழுப்பகுதியிலும் உள்ள கேந்திர மூலோபாயத்தை கொண்ட  அனைத்து துறைமுகங்களையும் பார்க்க கடற்கலன்களை மிகவும் இலகுவாக நகர்த்க் கூடிய  உட்கட்மைப்பை கொண்ட துறைமுகமாக இது திகழ்கிறது

இதனால் Fleet என்று கூறக்கூடிய ஒரு கடற்படை  முழுமையாக தரித்து நின்று, கொந்தளிப்பு மிக்க பருவகாற்று காலங்களில் அமைதியாக செயலாற்றுவதற்குரிய தள  வசதிகளை கொடுக்கவல்லது.

இங்கே ஒரு கடற்படை என்பது இராணுவ பேச்சுகளில்  குறைந்தது மூன்று கடற்படை கப்பல்களும் ஆகக்கூடியது நூறு வரையிலுமாகும்.

கடற்படை என்பது யுத்தக் கப்பற்பிரிவுகளில்  வழித்துணைக் கப்பல்கள்,   போர்ப்படகுகளின் கூட்டுகள் , நாசகாரிகள், விமானம் தாங்கி கப்பல்கள், நீர்மூழ்கிகள்,  பயணிகள் கப்பல்கள் என பல்வேறு ரகங்களும் அடங்கும்

இவை அனைத்தையும் நிர்வகிக்கத்தக்க வகையில் இவற்றிற்குப் பின்புல உதவிக்காக வழங்கல் கப்பல்கள்,  இழுவை கப்பல்கள், பழுதடைந்த அல்லது விபத்துக்குள்ளான கப்பல்களை மீள்திருத்தம் செய்யக் கூடிய வசதிகளை கொண்ட கப்பல்கள் ஆகியவற்றுடன் நீரிலிருந்து கப்பல்களை தரைக்கு ஏற்றும் வசதி வகைகள் ஆகிய அனைத்தையும் பரிபாலிப்பதே ஒரு கடற்படை என பார்க்கப்படுகிறது

இதனால் யுத்தகப்பல்கள் வெடிபெருட்கள், உணவுக்கள், எரிபொருள், உதிரிப்பாகங்கள் ஆகியன இல்லாது நீண்ட காலம் செயலாற்ற முடியாது இத்தகைய அனைத்து வசதிகளையும் கொள்ளடக்க கூடிய திறன் திருகோணமலை துறை முகத்தில் உள்ளது என்பது இங்கே முக்கியமானதாகும்.

ஒக்ரோபர் மாதத்திலிருந்து மார்ச்மாதம் வரையில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பருவப்பெயர்ச்சி காற்று காரணமாக கடற்தள நிலை கொந்தளிப்பு கொண்டதாகும்.  இந்த தளம்பல் நிலையின் தாக்கத்திற்கு உள்ளாகாத வகையில் இந்து சமுத்திரத்தின் நடுவில் உள்ள  திருகோணமலையில்  நிலையாக நின்று செயலாற்ற கூடிய  வசதி உள்ளது.

அது மாத்திரம் அல்லாது இந்த துறைமுகத்தில் நிலை எடுத்து கொண்டிருக்கக் கூடிய   கடற்படை ஒன்று  வங்காள விரிகுடாவையும் இந்து சமுத்திர கிழக்கு பிராந்தியத்தையும் கட்டுப்படுத்தும் வலிமை பெற்று விளங்கும் என்பது மூலோபாய ஆய்வாளர்களது பார்வையாகும்.

கடற்கலங்களின் பிரசன்னம்

அமெரிக்க தேசிய பாதுகாப்பு கடற்படை  மூலோபாய கொள்கைகள் குறித்த ஆய்வுகளை Center For New American Secuity என்ற கொள்கைஆய்வு மையம் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்டிருந்தது. இந்த ஆய்வு அறிக்கைகளில் சர்வதேச கடலில் கடற்படை கப்பற் கலன்களின்  பிரசன்னம் குறித்த தெளிவான விளக்கங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

இவ்வறிக்கையின் படி உலகெங்கும் உள்ள கடற் பகுதிகளில் அமெரிக்க கடற்கலங்கள் உலா வருவதும் தரித்து நிற்பதும்-  எதாவது ஒரு நிகழ்வு இடம் பெறும்வரை காத்து நிற்கின்றன என்ற எண்ணம் பிழையானது ஆகும்.

அதேவேளை கடற்பிரசன்னம் ஒரு செயலற்ற வெறும் மிதப்பு நடவடிக்கை அல்ல. பதிலாக கடற்கலம் கடலில் இறங்கியதுமே மிகவும் சுறுசுறுப்பான நடவடிக்கைகளில் இறங்கி விடுகின்றன . கர்வதேச கடற்கரை ஓர நாடுகளில் மட்டுமல்லாது நிலப்பரப்பை தமது எல்லைகளாக கொண்ட நாடுகளிலும் கூட  உள்நாட்டில்  என்ன நடக்கிறது என்பது அமெரிக்க கடற்படைக்கு ஏற்கனவே தெரிந்த விடயமாகும்.

கப்பல்களின் நிறைவேற்றப்பட வேண்டிய பல்துறை  நடவடிக்கைகளை வரிசைப்படுத்துதல். அவை  இராணுவ முனைப்பு ஆக இருந்தாலும் இராஜதந்திர முனைப்பு ஆக இருந்தாலும் புவியியல் சார் கணக்கெடுப்புகளாக இருந்தாலும் அடுத்த நிலையை அடையும் வரை மிகவும் சுறுசுறுப்பாக கப்பல் இயங்கிய வண்ணம் இருக்கும்.

கப்பல்கள், யுத்த நாசகாரிகள், கடற்படை பிரிவுகள், கரையோர காவல் படையினர், ஆகியன கடற்கலங்களின் பிரசன்ன நடவடிக்கையில் பங்குபற்றுகின்றன.  இந்த பிரசன்ன நடவடிக்கைகளின் பிரதான காரணம் இங்கே முக்கிய மானது.

பெரும்பாலான இன்றைய கடற்கலன்கள் உலக இயல்புக்கு தகுந்த வாறு அல்லது நவீனதொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய உளவு அறிக்கைகள் சேகரிக்கும் வசதிகளை நிச்சயமாக கொண்டிருப்பதுடன்  கூட்டு நாடுகளின் ஆதரவுடன் இந்த பயிற்சிகள் இடம் பெறுவதால், சினேகபூர்வமாக பல தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.

துறைமுக வருகைகள் இவற்றுள் முக்கியமானவையாகும்.  பல்வேறு நாட்டு கப்பற்கலங்களும் திருகோணமலைக்கும் கொமும்பிற்கும் அம்பாந்தோட்டைக்கும் வருகை தருகின்றன,  இதே போல பல்வேறு துறைமுகங்களுக்கும் அவை வருகை தருவதுண்டு,

இதில் துறைமுக கட்டுகளின்  உயரம், நீளம் , எவ்வளவு விரைவாக தரித்து நிறுத்தக் கூடிய தன்மை, மீள எடுத்து செலுத்திச் செல்லக் கூடிய இலகுநிலை, அந்த பிராந்தியத்தில் இருக்கக் கூடிய கடலடி மணற்திட்டுகள்,  கடலடிபாறைகள் ஆகியவற்றுடன் பல்வேறு நேர அட்டவணைகள் என அனைத்தும் பதிவிலெடுக்கப் படுகிறது.

எப்பொழுதாவது யுத்தகாலம் ஒன்று வருமாயின் அதற்கு ஏற்ற வகையில் ஏற்கனவே பரீட்சயப்படுத்தி கொள்வதே இதன் நோக்கமாக சொல்லப்படுகிறது.

துறைமுகங்கள் பழுது பார்க்கப்படுகின்றன, திருத்தி அமைக்கப்படுகின்றன. இந்த நிலையில் மீண்டும் மீண்டும் பல்வேறு நாடுகளின் கடற்கலன்களும் வருகை தருகின்றன.

அதில் யுத்தகாலம் மட்டுமல்லாது இயற்கை அனர்த்தகாலங்களின் போதும் கூட அல்லது சர்வதேச பயங்கரவாத நடவடிக்கைகள், மனிதகடத்தல்,  போதை பொருள்  கடத்தல் கடற் கொள்ளையரை மடக்குதல் போன்ற பல குற்றச்செயல்களை தடுப்பதுவும் இத்தகைய துறைமுக வருகைகளுக்கு காரணமாக பல்வேறு அரசுகளின் கடற்படைகளாலும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த வருகைகளின் போது சேகரிக்கப்படும் சமூகங்கள் குறித்து தரவுகள், அவர்களது உணவு வகைகள் அவர்களது கல்வி அறிவு, கடல்சார் அறிவு உள்ளுர் தலைவர்களுடன் உறவாடுதல், மருத்துவ உதவிகள் பரிசுப்பொருட்கள் வழங்குதல் என்பன மூலம் உளவியல் செல்வாக்கை பெறுவதுடன் நன்நம்பிக்கையை பெறுதல் ஆகியன முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது.

சர்வதேச ஆர்வம்

அமெரிக்கா, ஜப்பான் ஆகிய இரு நாடுகளும் திருகோணமலை மீது தமது ஆர்வத்தை கொண்டிருப்பதில் முக்கிய மானவையாக கருதப்படுகின்றன. திருகோணமலை பிரதான எண்ணெய் எரிபொருள் கொள்கலன் வசதிகளை கொண்டிருப்பதால், இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளும் கூட்டாக வியாபார இராணுவ  தேவைகளை மையாக கொண்டு தமது ஆர்வங்களை காட்டிவருகின்றன.

அதேவேளை தென் கொரியாவும் கூட திருகோணமலைப் பிரதேசத்தை வர்த்தக வலயமாக பயன்படுத்துவதில் முக்கிய கவனம் கொண்டுள்ளது.

அண்மையில்  அமெரிக்க பாதுகாப்பு செயலகம்,பென்டகன் இந்து சமுத்திர பிராந்தியம் குறித்த அறிக்கை ஒன்றை விடுத்திருந்தது. அமெரிக்க காங்கிரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட இந்த அறிக்கையில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் கடல் சார் விஸ்தரிப்புகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு இருந்தது.

குறிப்பாக சீனாவினால் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள  சிறிலங்காவின் அம்பாந்தோட்டை , பாகிஸ்தானின் குவடார் துறைமுகங்கள் சேமிப்பு வழங்கல் கட்டமைப்பு போல் தெரிந்தாலும் பிற்காலத்தில் அதிகரித்த இராணுவ பிரசன்னத்திற்கு பெரும் உதவியாக இருக்கக் கூடியது என்பது அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயமாகும்.

2015 ஆம் ஆண்டு ஒடுங்கிய செங்கடல் பகுதியின் இந்து சமுத்திரப் பகுதி வாயிலில் உள்ள டிஜிபோட்டி பகுதியில் புதிய தளம் ஒன்றை சீனா அமைத்துள்ளது.

சீன அரசாங்கம் வர்த்தக நலன்களை மையமாக கொண்டே தனது விரிவாக்கத்தை செய்கிறது. விநியோகப் பாதைகளை பாதுகாத்தல் என்பதன் அடிப்படையிலேயே சாதாரணமாக விரிவாக்கம் அமைந்துள்ளது என்பது ஒருசாராரது விவாதமாக இருந்து வருகிறது.

ஏனெனில் இன்றைய சர்வதேச அரசியல்  நிலையை பொறுத்தவரையில்  சீனா கடுமையான தொனியை பிரயோகப்படுத்தி தனது இராஜதந்திர  அணுகுமுறைகளை கொண்டிருக்காது .  பாதுகாப்பு விவகாரங்களில் கவனம் செலுத்துவதிலும் பார்க்க அதனது சக்திவள விநியோக பாதைகளை  உறுதிப்படுத்தவதிலேயே அதிகம் கவனம் கொண்டுள்ளது.

மூலோபாய பாதுகாப்பு குறித்த விவகாரங்களில் கவனம் செலுத்தம்போது  தனது பொருளாதார அபிவிருத்திக்கும் அதன் மூலம் ஏற்படுத்தப்பட கூடிய பலநிலைக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தன்னெழுச்சியான அதிகார தோரணைகளை அதிக இடங்களில் விட்டு கொடுத்து நடந்து கொள்கிறது.

இந்தநிலை உலகளாவிய ஆட்சி வல்லமை பெற்றதன் பின்பு நிறைய மாற்றங்களை கொண்டதாக இருக்கும் என்பது ஆய்வாளர்களின் பார்வையாக உள்ளது. இதற்கு ஏற்றவகையிலேயே சீனாவின் சர்வதேச ஆட்சி நிலையை அடையும் நோக்கை கட்டுக்குள் வைத்திருக்க முனையும் அமெரிக்கா போன்ற நாடுகள் தமது இராஜதந்திர நகர்வுகளை இந்து சமுத்திர நாடுகளை நோக்கி திருப்பி விட்டிருக்கின்றன.

இருந்த போதிலும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் பிரசன்னம் அதன் பிராந்திய செல்வாக்கை அதிகரிப்பதற்குரிய அதிக சந்தர்ப்பங்களை கொடுக்கிறது. உதாரணமாக சிறிலங்காவில் தனது கடந்த கால வரலாற்று பிரசன்னத்தை நிரூபிக்கும் வகையில்  சீனா வரலாற்று ஆதாரங்களை தேடி ஆய்வுகள் மேற்கொள்ள முனைந்திருப்பது கவனிக்கத்தக்கதாகும்.

அதேவேளை சிறிய நாடுகளும் இருதரப்பையும் சமநிலைப்படுத்தம் வகையில் தமது இராஜதந்திர நகர்வுகளை முனைப்புடன் செய்து வருகின்றன உதாரணமாக  சிறிலங்காவின் பல்வேறு பிரதான ஊடகங்களும் சீன பிரசன்னத்தை பெரிதாக அலட்டி கொள்ளாது மேற்கு நாடுகள் சீறிலங்காவில் தலையிடுவதை பெருமளவில் குறைகாணும் ஒருவகை ஒழுக்கத்தை கொண்டிருக்கின்றன.

ஆனால் மேற்கு நாடுகள்  சிறிலங்காவை அழுத்தத்திற்கு உள்ளாக்கும் வகையில் யுத்த குற்றச்செயல்க்ளையும் பொறுப்பு கூறல் இனங்களுக்கிடையிலான சமரசம் ஜனநாயக மாண்புகள் என்பன குறித்த விவகாரங்களை முன்னிறுத்துகின்றன . .

இந்த நிலையில் இந்து சமுத்திர கடற்பாதை மீதான ஆர்வம் ஆசிய- பசுபிக் நாடுகளுக்கு இடையிலான பரந்து விரிந்த மூலோபாய வரைபாக இந்தோ- பசுபிக் பிராந்தியமாக மாற்றம் செய்யப்பட்டு கொள்கைகள் வகுக்கப்படுகிறது.

கொழும்பு, அம்பாந்தோட்டை ஆகிய இரு துறைமுகங்களும் ஏற்கனவே சீன செல்வாக்கில் வந்து விட்ட நிலையில்  திருகோணமலை துறைமுகத்தில் இருந்து  இந்தோ – பசுபிக் பிராந்தியத்தின் விரிவாக்கம் வியட்னாமிய கடற்கரைகள் வரையில் பரந்து விரிந்ததாக உள்ளது.

Brexit உம் திருமலையும்

இந்த கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் போது பிரித்தானியாவில்  ஐரோப்பிய நாடுகளின் கூட்டிலிருந்து  தன்னை விடுவித்து கொள்வதா இல்லையா?  அவ்வாறு விடுவித்து கொள்வதாயின் பாரிய பொருளாதார அரசியல் தாக்கங்களை எவ்வாறு கையாளுவது போன்ற தீர்மானங்கள் நீண்ட இழுபறியில் கிடக்கிறது. ஆனால் வெளியேற்றத்தின் பின் ஆன பிரித்தானிய பாதுகாப்பு மூலோபாய சிந்தனைகள் ஏற்கனவே வெளிவர ஆரம்பித்து விட்டன.

பிரித்தானியா இரண்டாம் உலகப்போர் காலத்தின் பிற்காலப் பகுதியில் தனது சர்வதேச அரங்க செயற்பாடுகளை மிகவும் குறைத்து கொண்ட நிலையை கடைப்பிடித்தது. ஆனால்  ஐரோப்பிய வெளியேற்றத்தின் பின் காலப்பகுதியில் நாட்டின் சர்வதேச செல்வாக்கும்  அங்கீகாரமும் இனி தலை நிமிர்ந்து நிற்கும்.

சர்வதேச அளவிலான பாத்திரங்கள் பலவற்றை வகிப்பதில் பிரித்தானியா ஆர்வம் கொண்டதாக இருக்கும். அவற்றில் பாதுகாப்பும் மூலோபாயமும் முக்கிய இடம் வகிக்கும் என்ற பாதுகாப்பு செயலரின் கூற்றும்

தெற்காசிய நாடுகளின் மத்தியிலும் கரீபியன் தீவுகளின் மத்தியிலும் இராணுவ தளங்களை அமைத்து கொள்வதில் பிரித்தானியா ஆர்வம் கொண்டுள்ளது என்ற வெளியுறவு பொது நலவாய செயலரின் கூற்றும்  வெளிவந்திருந்தது.

இந்த கூற்றுகளை மையமாக வைத்து ஏற்கனவே, இரண்டாம் உலகப்போர் காலத்தில் இந்திய உபகண்டத்தையும் வங்க கடற் போர்கள வட்டகையாக இருந்த கிழக்கு இந்து சமுத்திர பிராந்தியத்தையும் பாதுகாக்கும் பொருட்டு ஏற்கனவே கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் திருகோணமலையை பிரித்தானியா தனது இராணுவ தளமாக்க முயலும் என்ற வகையிலான செய்திகளை கொழும்பு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

திருகோணமலையில் பிரித்தானியா தனது தளத்தை அமைக்கும் திட்டம் கொண்டுள்ளதோ இல்லையோ , திருகோணமலையை சந்தைப்படுத்தும் போக்கை சிறிலங்கா மிக முக்கியமாக கொண்டுள்ளது.

அதேவேளை சர்வதேச மனிதஉரிமை சபையில் தனது நடவடிக்கைகளை பிரித்தானியா முன்னெடுத் திருப்பதுவும் இங்கே கவனிக்ககூடியதாகும்

2016ஆம் ஆண்டு பிரித்தானியா அரசால் நியமிக்கப்பட்ட சிறிலங்காவுக்கான நிரந்தர வதிவிடம் இல்லாத பாதுகாப்பு ஆலோசகரான ஸ்ருவாட் போர்லன்ட் அவர்கள் திருகோணமலையில் உள்ள பிரித்தானியா படைகளின் போர் சமாதிகளுக்கு வருகை தந்திருந்தார்.

அந்த வருகையின் போது சிறிலங்காவின் நல்லிணக்க நடவடிக்கைகளும் பொறுப்புக்கூறலும் மனித உரிமை விவகாரங்களும் மிக நீண்டகால  தீர்க்கப்படாத பிரச்சனைகளாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

பிரித்தானியா தனது வரலாற்று ஆதாரங்களை திருகோணமலையில் உறுதிப்படுத்தும் அதேவேளை சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களை நன்கு அறிந்த நிலையை கொண்டிருக்கிறது என்பது மட்டும் உன்மையானதாகும்.

இதனால் பிரித்தானியா புலம்பெயர் தமிழ் தேசிய செயற்பாடாளர்கள் தமது அரசாங்கத்தில் அதிக செல்வாக்கை பெற்றுக் கொள்ள வேண்டிய காலமுமாகும்.

  • லண்டனில் இருந்து லோகன் பரமசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *