மேலும்

கோத்தாவே வேட்பாளர் – தேசியவாதிகளும், இடதுசாரிகளும் முடிவு

கோத்தாபய ராஜபக்ச தான், அடுத்த அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளவர் என்ற இறுதியான முடிவுக்கு தேசியவாதிகளும், இடதுசாரிகளும் வந்து விட்டனர் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“முன்னதாக, அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவை களமிறக்குவது தொடர்பாக இந்த இரண்டு முகாம்களும் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருந்தன.

எனினும், தற்போது கோதத்தாபய ராஜபக்ச தான் மிகப் பொருத்தமான வேட்பாளர் என்று இரண்டு தரப்புகளும் புரிந்து கொண்டுள்ளன.

இருந்தாலும், இறுதியான முடிவுது எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின்  கைகளிலேயே உள்ளது.

சிறிலங்கா பொதுஜன முன்னணியால் நிறுத்தப்படும் வேட்பாளரை மாத்திரமே தங்களால் ஆதரிக்க முடியும் என்று அந்தக் கட்சியின் சில உறுப்பினர்கள் கூறி வருவது உண்மை.

ஆனால், கோத்தாபய ராஜபக்ச சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினரா- இல்லையா என்பது எனக்குத் தெரியாது.

ஆனால் அதிபர் தேர்தலில் எந்தக் கட்சி என்பது அதிகம் பிரச்சினையல்ல.   யார் வேட்பாளர் என்பதே முக்கியமானது.

அதற்கு தகுந்த உதாரணம், 2015இல் அன்னம் சின்னத்தில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றிருந்ததை குறிப்பிடலாம்.

எனவே, நாங்கள் செல்லுபடியான வாக்குகளில் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைக் பெறக்கூடிய பொருத்தமான வேட்பாளரையே தேட வேண்டும். அதுதான் எமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

பலர் இதனை மறந்து விடுகிறார்கள். அவர்களின் பேச்சு தோல்வியைப் பற்றியதாகவே இருக்கிறது” என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *