உலக வங்கி துணைத் தலைவர் இன்று சிறிலங்கா வருகிறார்
உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்துக்கான உதவித் தலைவர் ஹார்ட்விக் ஸ்காபர் சிறிலங்காவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இவர் இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதி அமைச்சர் மங்கள சமரவீர, மற்றும் ஏனைய அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
கொழும்பு மாநகர முதல்வர் றோசி சேனநாயக்கவையும் சந்தித்து, வேலைப் படையில் பெணகளின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்தப் பயணம் தொடர்பாக ஹார்ட்விக் ஸ்காபர் வெளியிட்டுள்ள கீச்சகப் பதிவில், “இலங்கைத்தீவு எதிர்கொள்ளும் அபிவிருத்திச் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பாக, அறிந்து கொள்வதற்காக பங்காளர்களைச் சந்திக்கவுள்ளேன்.
10 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். எனது கடந்த பயணத்துக்குப் பின்னர் சிறிலங்கா பல்வேறு துறைகளில் முன்னேற்றங்களை எட்டியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் உலக வங்கியின், தெற்காசியப் பிராந்தியத்துக்கான உதவித் தலைவர் மேற்கொள்ளும் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.