சிறிலங்காவுடன் உறவுகளை வலுப்படுத்த விரும்பும் அமெரிக்கா
சிறிலங்காவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொண்டு, இணைந்து பணியாற்றுவதற்கு விரும்புவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் 71 ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு அவர், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “தேசிய நாளைக் கொண்டாடும், சிறிலங்காவுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுவான ஜனநாயக பெறுமானங்களின் அடிப்படையில் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தின் நலன்களைப் பகிர்ந்து கொள்வதற்கு, சிறிலங்காவுடனான கூட்டை கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா ஆர்வமாக உள்ளது.
சிறிலங்காவின் ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு செயற்பாடுகள் உங்கள் நாட்டிற்கு தொடர்ந்து முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை இன்னும் ஆழமாக்கிக் கொண்டு, செழிப்பை ஊக்குவித்து, நிலையான மற்றும் அமைதியான எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு, இணைந்து பணியாற்ற நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும், தேசிய நாளைக் கொண்டாடும் உங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும், அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.