சிறிலங்காவின் 71ஆவது சுதந்திர நாள் இன்று – கரிநாளாக கடைப்பிடிக்கும் தமிழர்கள்
சிறிலங்காவின் 71 ஆவது சுதந்திர நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழர் தாயகத்தில் கரிநாளாக அதனை கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் 71ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு கொழும்பில் காலிமுகத்திடலில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்று சிறிலங்காவின் தேசியக் கொடியை ஏற்றி வைப்பார்.
அத்துடன் சிறிலங்காவின் இராணுவ வலிமையை வெளிப்படுத்தும் வகையிலான, முப்படையினர், காவல்துறையினர் உள்ளிட்டவர்கள், போர்த்தளபாடங்கள் பங்கேற்கும் இராணுவ அணிவகுப்பும் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினராக, மாலைதீவின் அதிபர் இப்ராகிம் அப்துல்லா சோலி பங்கேற்கிறார்.
அதேவேளை, சிறிலங்காவின் சுதந்திர நாளை தமிழர்களின் சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அதனை கரிநாளாக- துக்கநாளாக கடைப்பிடிக்குமாறும், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது.
இதனை முன்னிட்டு இன்று கிளிநொச்சியில் போராட்டம் ஒன்றை நடத்தப் போவதாகவும், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
இந்தப் போராட்டத்துக்கு சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அதேவேளை கேப்பாப்புலவில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி, 700 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வரும், மக்களும், இன்றைய நாளை கரிநாளாக கடைப்பிடிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
நீதி கோரிப் போராடும் மக்கள் இன்று வடக்கு, கிழக்கில் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடவுள்ளனர்.