சட்டம், ஒழுங்கு, ஊடகத்துறை அமைச்சுக்களால் இழுபறி – அடம்பிடிக்கிறார் மைத்திரி
புதிய அமைச்சரவை இன்று காலை பதவியேற்கவுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு அமைச்சு மற்றும் ஊடகத் துறை அமைச்சு என்பன தொடர்பாக இழுபறி நிலை காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன புதிய அமைச்சர்களுக்கு இன்று காலை பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.
எனினும், சட்டம், ஒழுங்கு அமைச்சையும், ஊடகத்துறை அமைச்சையும், ஐதேகவுக்கு விட்டுக்கொடுக்க அவர் இன்னமும் இணக்கம் தெரிவிக்கவில்லை என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில், 30 அமைச்சர்களே அங்கம் வகிக்க முடியும் என்பதால், அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தவிர்ந்த 28 பேரே புதிதாக நியமிக்கப்பட முடியும்.
இந்தநிலையில், அமைச்சர்களாக நியமிப்பதற்கு 35 பேர் கொண்ட பட்டியலை சிறிலங்கா அதிபரிடம் ஐக்கிய தேசியக் கட்சி நேற்று அனுப்பியிருந்தது.
எனினும், இந்தப் பட்டியலில் அரசதரப்புக்குத் தாவிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.
அதேவேளை, சரத் பொன்சேகா, பாலித ரங்கே பண்டார, அர்ஜூன ரணதுங்க ஆகியோருக்கு அமைச்சரவையில் இடமளிக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் கூறிவிட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், அவர்களும் இன்று அமைச்சர்களாக நியமிக்கப்படும் வாய்ப்புள்ளதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது.