மேலும்

வவுணதீவு காவல்துறையினர் கொலை – முன்னாள் போராளி சரண்

மட்டக்களப்பு- வவுணதீவு சோதனைச் சாவடியில், பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த, சிறிலங்கா காவல்துறையினர் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா காவல்துறையினரால் தேடப்பட்ட ஒருவர், நேற்று கிளிநொச்சி காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

கிளிநொச்சி- வட்டக்கச்சியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான, கண்ணன் என அழைக்கப்படும், இராசநாயகம் சர்வானந்தன் (வயது-48) என்பவரே சரணடைந்தவராவார்.

இவரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

வவுணதீவு சோதனைச்சாவடியில் காவலில் ஈடுபட்டிருந்த இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் வெள்ளிக்கிழமை அதிகாலை 6 மணியளவில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

இவர்கள் ரி-56 துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். இந்தச் சம்பவம், வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணிக்கும், 6 மணிக்கும் இடையிலேயே நடந்திருக்க வேண்டும் என்று காவல்துறையினர் கருதுகின்றனர்.

சிறப்பு அதிரடிப்படையின் ரோந்து அணி அதிகாலை 1 மணிக்கு கடந்து சென்ற பின்னரே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதிகாலை 1 மணியளவில் அந்தப் பகுதியைக் கடந்த சென்ற இரண்டு உந்துருளிகள் தன்னியக்க கண்காணிப்பு காணொளி பதிவு கருவிகளில் பதிவாகியுள்ளது.

கடந்த 27ஆம் நாள், மாவீரர் நாள் நிகழ்வு ஒழுங்கமைப்பு தொடர்பாக, ஏற்பட்ட முரண்பாடுகளின் விளைவாக இந்தக் கொலைகள் இடம்பெற்றிருக்கலாம் என்ற கோணத்திலேயே சிறிலங்கா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மட்டக்களப்பு- தாண்டியடி மாவீரர் துயிலுமில்லத்தில், இம்முறை மாவீரர் நாளை ஒழுங்குபடுத்திய போது, சிறிலங்கா காவல்துறையினர் அதற்கு நீதிமன்றத்தில் தடை கோரியிருந்தனர்.

புலிகளின் சின்னங்கள், கொடி, பாடல் என்பனவற்றைப் பயன்படுத்தாமல், நிகழ்வை நடத்த நீதிமன்றம் அனுமதித்திருந்தது.

எனினும், மாவீரர்கள் நினைவாக நாட்டப்பட்ட நடுகற்களை அகற்றுமாறு அச்சுறுத்திய சிறிலங்கா காவல்துறையினர், ஏற்பாட்டாளர்களுடன் முரண்பட்டிருந்தனர்.

இந்த முரண்பாடுகளின் விளைவாகவே, இரண்டு சிறிலங்கா காவல்துறையினரும் பழிவாங்கும் நோக்கில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.

இதன் அடிப்படையில், மாவீரர் நாள் ஏற்பாடுகளில் முன்னின்று செயற்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளான மூவரை சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைக்குட்படுத்தினர்.

அம்பாறை- தம்பிலுவிலில் சிறப்பு அதிரடிப்படையினரால் பிரபாகரன் என்ற முன்னாள் போராளி கைது செய்யப்பட்டார். மற்றொரு முன்னாள் போராளியான அஜந்தன் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டார்.

கண்ணன் எனப்படும், இராசநாயகம் சர்வானந்தன் என்ற முன்னாள் போராளியை தேடி வந்த நிலையில் நேற்று அவர் கிளிநொச்சி காவல் நிலையத்தில் சரணடைந்தார். எனினும் அவரை தாங்கள் கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறை கூறியுள்ளது.

மேலும் இரண்டு பேரை விசாரணைக்காக கொண்டு சென்றிருந்த சிறிலங்கா காவல்துறையினர் அவர்களை விடுவித்துள்ளனர்.

அதேவேளை, கிளிநொச்சியில் சரணடைந்த முன்னாள் போராளியை மட்டக்களப்புக்கு கொண்டு சென்று விசாரணைகளை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்தக் கொலைகள் தொடர்பான விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவின் 7 அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *