மேலும்

ஐதேமு ஆட்சியமைக்க கூட்டமைப்பு ஆதரவு – மைத்திரிக்கு14 எம்.பிக்கள் அவசர கடிதம்

கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாளுக்கு முன்னர் இருந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை மீண்டும், ஆட்சியில் அமர்த்துவதற்கு தமிழ்த் ஆதரவு அளிப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கடிதம் அனுப்பியுள்ளனர்.

சிறிலங்கா அதிபருக்கு இன்று அனுப்பியுள்ள அவசர கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“கடந்த ஒக்ரோபர் மததம் 26 ஆம் நாளில் இருந்து நடந்த அனைத்து சம்பவங்களினதும் பின்னணியின் அடிப்படையில் மேற் குறித்த விடயம் தொடர்பாக நாங்கள் அக்கறை கொண்டு, இந்தக் கடிதத்தை எழுதுகின்றோம்.

கடந்த ஒக்ரோபர் மாதம் 26 ஆம் நாள் பிரதமராக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர், ( மகிந்த ராஜபக்ச), அவர் நியமிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையிலும், இந்தக் காலப் பகுதியில் பல தடவைகள் நாடாளுமன்றம் கூடியுள்ள போதிலும், தனக்கு நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை நம்பிக்கையை உள்ளது என்பனை நிரூபித்துக் காட்ட முடியாத ஒருவராக காணப்படுகின்றார்.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் மீது பிரதமராக இருப்பதற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கடந்த 14, 16 ஆம் நாள்களில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

‘குரல்’ அடிப்படையில் எடுக்கப்பட்ட வாக்குகள் 122 உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதுமாத்திரமன்றி இது தொடர்பிலான சபாநாயகரின் அறிக்கைகளும் உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமராக இருப்பதற்கு நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை பெற்றுள்ளாரா என்ற வினாவுக்கு பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்து எதிராகவே உள்ளது. அதுமாத்திரமன்றி சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபிக்கப்பட்டும் உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர், பிரதமராக தான் இருப்பதற்கு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையை பெற்றுள்ளார் என்பதனை நிரூபித்துக் காட்ட இயலாது போயுள்ளது.

இந்தநிலையில் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமராக இருப்பதற்கு எதிராக, கடந்த 14 மற்றும் 16 ஆம் நாள்களில் நிறைவேற்றப்பட் ட நம்பிக்கையில்லாத் தீர்மானங்களானது, இந்த நாட்டில் ஒரு பிரதமரோ, அமைச்சரவையோ சட்டபூர்வமாக நியமிக்கப்பட்ட அரசாங்கம் ஒன்றோ இருக்கின்றதா என்ற முரண்பாட்டை தோற்றுவித்துள்ளது.

இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்க முடியாது என்பதை நாம் மிகவும் மரியாதையுடன் கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.

இதனால் நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமராக நியமிக்கப்படுவதனை உறுதி செய்யும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நாம் கடந்த ஒக்ரோபர் மாதம் 26 ஆம் நாளுக்கு முன்னர் இருந்த, ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தினை மீள அமைப்பதற்கு ஆதரவளிப்போம்.

அத்துடன், ஐக்கிய தேசிய முன்னணியினால் நியமிக்கப்படும், நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை பெறக் கூடியவர் என நீங்கள் கருதும் நபரை பிரதமராக நியமிக்க வேண்டும் எனவும், தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

மேற் குறிப்பிட்ட விடயங்களை அதிபராகிய தங்களுக்கு தெரியப்படுத்துவதை எமது கடமையாக கருதுகின்றோம்” குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை.சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிறிதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சரவணபவன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறீஸ்கந்தராசா, சிவமோகன், சீனித்தம்பி யோகேஸ்வரன், சிறிநேசன், கோடீஸ்வரன் மற்றும் துரைரெட்ணசிங்கம் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *