மேலும்

மண்டைதீவு துடுப்பாட்ட மைதான கட்டுமானத்தை நிறுத்த உத்தரவு

மண்டைதீவில் அனைத்துலக துடுப்பாட்ட மைதானம் மற்றும் விளையாட்டு வளாகம் அமைக்கும், அனைத்து கட்டுமான நடவடிக்கைகளையும், சுற்றுச்சூழல் அனுமதி  செயல்முறை முடியும் வரை நிறுத்துமாறு மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறையின் ஒரு பகுதியாக  ஒரு திட்ட சுருக்க அறிக்கையை  சிறிலங்கா துடுப்பாட்ட சபைக்கு, அனுப்பியுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கபில மகேஷ் ராஜபக்ச, தெரிவித்துள்ளார்.

மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட 48 ஏக்கர் நிலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வராது என வனவளப் பாதுகாப்புத் திணைக்களம் உறுதிப்படுத்திய பின்னர் திட்ட சுருக்க அறிக்கை வழங்கப்பட்டது.

இருப்பினும், திட்டத்தின் சாத்தியமான சுற்றுச்சூழல் தாக்கங்களை மதிப்பிடும் முழுமையான சுற்றுச்சூழல் மதிப்பீடு சமர்ப்பிக்கப்படும் வரை சிறிலங்கா துடுப்பாட்டச் சபை, இந்த திட்டத்தை தொடர முடியாது.

சிறிலங்கா துடுப்பாட்டச் சபை,  சுற்றுச்சூழல் தாக்கத்தை மதிப்பீடு செய்து தொடர்புடைய அறிக்கைகளை எங்களிடம் சமர்ப்பித்த பின்னரே, ஒப்புதல் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும்.

அதுவரை, அனைத்து கட்டுமான நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டிருக்கும் என கபில மகேஷ் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *