மேலும்

நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்ற மகிந்த முன்வைக்கும் 12 வழிமுறைகள்

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முறைப்படி நிறைவேற்றுவதற்கு 12 வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவின் செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் செயலர் அமரசேகரவினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள 12 வழிமுறைகளாவன.

குறைந்தது 20 உறுப்பினர்களின் கையெழுத்துடன் நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்க வேண்டும்.

இரண்டாவது கட்டமாக, நம்பிக்கையில்லா பிரேரணையின் சட்டபூர்வ தன்மை குறித்து சபாநாயகர், நாடாளுமன்ற செயலருடன் ஆலோசனை நடத்த  வேண்டும்.

அது சட்டபூர்வமானது என்று, நாடாளுமன்றச் செயலர் கூறினார், நம்பிக்கையில்லா பிரேரணையை ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்க வேண்டும்.

அந்த ஒழுங்குப் பத்திரம், ஒரு வெள்ளிக்கிழமையில் அச்சிடப்பட வேண்டும்.

அது பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் விநியோகிக்கப்பட வேண்டும்.

ஐந்து வேலை நாட்களுக்குப் பின்னர், நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கலாம்.

ஒழுங்குப் பத்திரத்தில் முன்னுரிமை கொடுக்க வேண்டிய விடயத்தை, சபாநாயகர் தலைமையிலான நாடாளுமன்ற செயற்பாடுகள் பற்றிய குழு, முடிவு செய்யும். அரசாங்க விவகாரங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது பற்றி அவைத் தலைவர் முடிவு செய்யலாம்.

நம்பிக்கையில்லா பிரேரணை ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்ட பின்னர், அரசாங்கம் மற்றும் அவைத் தலைவரின் இணக்கப்பாட்டுடன், அதனை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் அண்மைய நாள் ஒன்றை முடிவு செய்யலாம்.

அதன் பின்னர், குறிப்பிட்ட நாளில் நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும்.

அடுத்து நம்பிக்கையில்லா பிரேரணையில் அரசாங்க மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களுக்கான விவாத நேரத்தை நாடாளுமன்ற விவகாரக் குழு, முடிவு செய்ய வேண்டும்.

இறுதி நடவடிக்கையாக, குறிப்பிட்ட நாளில் நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்துக்கு எடுக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவு அறிவிக்க வேண்டும்.

கடைசியாக அது நாடாளுமன்ற பதிவேட்டில் உள்ளடக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகள், மரபுகளுக்கு அமைய இந்த நடைமுறைகள்  அரசியலமைப்பின் கீழ் பின்பற்றப்பட  வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *