மேலும்

சிறிலங்கா நாடாளுமன்றம் நள்ளிரவுடன் கலைப்பு – ஜனவரி 05இல் தேர்தல்

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படுவதாகவும்,  2019 ஜனவரி 05ஆம் நாள் தேர்தல் நடத்தப்படும் என்றும் சிறிலங்கா அதிபர் அறிவித்துள்ளார். இதுதொடர்பான அரசிதழ் அறிவிப்பு இன்று  இரவு வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 70 (05) பிரிவின் கீழும், 33(02) -சி பிரிவின் கீழும், 62 (02)  பிரிவின் கீழும் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவும், 1981 ஆம் ஆண்டின்  1ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 10 ஆவது பிரிவின் கீழும், தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய நாடாளுமன்றத்தை இன்று  நள்ளிரடன் கலைப்பதாக சிறிலங்கா அதிபர் அறிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றம், 2019 ஜனவரி 17ஆம் நாள் கூடும் எனவும், 2019 ஜனவரி 05ஆம் நாள், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்றும் அரசிதழ் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வரும் நொவம்பர் 19ஆம் நாள் தொடக்கம், நொவம்பர் 26ஆம் நாள்  நண்பகல் வரை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பெற்றுக் கொள்ளப்படும் என்றும் அரசிதழ் மூலம் சிறிலங்கா அதிபரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச அச்சகமும் பாதுகாப்பு அமைச்சு வசம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அரசாங்க அச்சகத் திணைக்களத்தை இன்று மாலை தனது கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்துள்ளார்.

இது தொடர்பான சிறப்பு அரசிதழ் அறிவிப்பு இன்று மாலை அவசர அவசரமாக வெளியிடப்பட்டது.

இதன் பின்னரே, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சிறப்பு அரசிதழ் அறிவிப்பில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *