மேலும்

அட்மிரல் விஜேகுணரத்ன விவகாரம் – நீதிமன்ற உத்தரவினால் சிறிலங்கா அதிபருக்கு நெருக்கடி

சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு, கோட்டே நீதிவான் ரங்க திசநாயக்க நேற்று உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவினால் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறார்.

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் முக்கிய சந்தேக நபரை தப்பிக்க உதவினார் என்று அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் கூறியிருந்தது.

இதையடுத்து, அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோட்டே பிரதம நீதிவான் பணித்திருந்தார்.

எனினும், அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுக்கவில்லை.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதற்குத் தடையை ஏற்படுத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கைது செய்து அவரது வாக்குமூலத்தை பெற நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும், அதனை தடுப்பது என்ன என்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியிடம் நீதிவான், கேள்வி எழுப்பினார்.

இதன் போது, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவைக் கைது செய்ய முற்பட்ட போது தமக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி தெரிவித்தார்.

அப்போது நீதிவான், குற்றப் புலனாய்வுப் பிரிவு மீது  எந்தவொரு அழுத்தம் அல்லது தலையீடு இருந்தால், அது பற்றி நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

விசாரணையை பக்கசார்பின்றி முன்னெடுப்பதற்கு, சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்த நீதிமன்றம் தயாராக இருப்பதாகவும் , எல்லா குடிமக்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என்பது மாத்திரமன்றி, சட்டத்தின் முன்பாக எல்லா குடிமக்களும் சமமானவர்கள் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவைக் கைது செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கும் போது சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிவான் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், அட்மிரல் ரவீந்திர குணரத்னவை கைது செய்ய விடாமல் தடுத்து வந்த சிறிலங்கா அதிபர் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்.

சிறிலங்கா காவல்துறையைக் கட்டுப்படுத்தும், சட்டம்- ஒழுங்கு அமைச்சையும் அவரே கைவசம் வைத்திருக்கும் நிலையில், பாதுகாப்பு அமைச்சராக, அட்மிரல் குணரத்னவைப் பாதுகாப்பதா- சட்டம் ஒழுங்கு அமைச்சராக அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுப்பதா-  என்ற குழப்பம் சிறிலங்கா அதிபருக்கு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *