மேலும்

சிறிலங்காவில் என்ன நடக்கிறது – என்ன சொல்கிறார்கள்? – நடப்புகளின் சங்கமம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது இராணுவத்தின் பொறுப்பு அல்ல என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “கடந்த 26 ஆம் நாள், நாட்டில் ஏற்பட்ட மாற்றம் அரசியல்வாதிகளுக்கு இடையிலான அரசியல் மாற்றமாகும்.  இந்த அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பது இராணுவத்தின் பொறுப்பல்ல.

இன, மத, பேதமின்றி உயிர்களையும், உடமைகளையும் பாதுகாப்பதே இராணுவத்தின் பொறுப்பு.

தற்போதைய சூழ்நிலையில், நாட்டில் கலவரங்கள் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்துவதற்கு காவல்துறையினரும், சிறப்பு அதிரடிப்படையினரும்  நடவடிக்கை எடுப்பார்கள்.

அவர்களால் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு, இராணுவத்தின் உதவியை கோரினால் மாத்திரமே, சிறிலங்கா இராணுவம் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும்.

இந்த நிலையில் அவசர நிலைமை ஏற்பட்டால், கலவரங்களை கட்டுப்படுத்துவதற்கு ஆகக் குறைந்த பலத்தை சிறிலங்கா இராணுவத்தினர் பயன்படுத்த வேண்டும்.

அதற்குத் தேவையான கருவிகளை சிறிலங்கா படையினர் தம் வசம் வைத்திருக்க வேண்டும் என சிறிலங்கா இராணுவ உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மற்றொரு ஐதேக உறுப்பினரும் பிரதி அமைச்சரானார் – வலைக்குள் வீழ்த்தும் மகிந்த அணி

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் இன்று கட்சி தாவி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதி அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

ஐதேகவின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மகிந்த – மைத்திரி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றிருந்தனர்.

இந்தநிலையில், இன்று மாலை ஐதேகவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான துனேஸ் கங்கந்த, சுற்றாடல்துறை பிரதி அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இவர் சிறிலங்காவின் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சவையும் சந்தித்துள்ளார்.

பாதுகாப்புச் செயலராக ஹேமசிறி, வெளிவிவகாரச் செயலராக ஆரியசிங்க

சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலராக ஹேமசிறி பெர்னான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று அவருக்கான நியமனத்தை வழங்கினார்.

புதிய அரசாங்கத்தின் 12 அமைச்சுக்களுக்குமான செயலாளர்கள் இன்று சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, சிறிலங்கா அதிபரின் செயலக அதிகாரிகளுக்கான பிரதானியாக இருந்த ஹேமசிறி பெர்னான்டோ பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, வெளிவிவகார அமைச்சின் செயலராக, ரவிநாத ஆரியசிங்க நியமிக்கப்பட்டிருக்கிறார்.

பாதுகாப்புச் செயலராக இருந்த கபில வைத்தியரத்ன அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, புதிதா ஹேமசிறி பெர்னான்டோ பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசியலமைப்பின் சிங்கள மொழி பிரதியே மைத்திரிக்கு கைகொடுத்தது

அரசியலமைப்பின் சிங்கள மொழிப் பிரதியில், பிரதமரை நீக்கும் அதிகாரம் சிறிலங்கா அதிபருக்கு உள்ளது என்றும் அதன் அடிப்படையிலேயே ரணில் விக்கிரமசிங்கவை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பதவிநீக்கம் செய்தார் என்றும், அமைச்சரும், அரசாங்க பேச்சாளருமான மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “நீதி மன்றத்தின் தீர்ப்புக்கள்  அனைத்தும் சிங்கள மொழியில் உள்ள அரசியலமைப்புக்கு அமையவே அமைகின்றன.

ரணில் விக்கிரமசிங்க ஆங்கிலத்தில் உள்ள அரசியலமைப்பைப் படித்து விட்டு அதற்கமையவே செயற்படுகிறார்.

அதன்படியே, பிரதமரின் பதவி நீக்கம் மற்றும் புதிய பிரதமர்  நியமனம் என்பன அரசியலமைப்புக்கு முரணானது என்று  வெளிநாட்டு தூதுவர்களுடனான சந்திப்பின் போது ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஆங்கில அரசியலமைப்பை விடுத்து, சிங்கள அரசியலமைப்பை படித்து தெளிவு பெற வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

16இற்கு முன்னர் ஒருபோதும் நடக்காது

நாடாளுமன்றம் முடக்கப்பட்டிருப்பது ஒன்றும் பெரிய விடயமல்ல என்று சிறிலங்கா அரசாங்க பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றம் வரும நொவம்பர் 5ஆம் நாளே கூடவிருந்தது. அது 16ஆம் நாளுக்குப் பிற்போடப்பட்டுள்ளது.

எனவே, உண்மையில் 10 நாட்களே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இது ஒன்றும் பிரச்சினையில்லை. எது எவ்வாறாயினும், நொவம்பர் 16ஆம் நாளுக்கு முன்னதாக நாடாளுமன்றம் ஒருபோதும் கூட்டப்படாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபருக்கு சபாநாயகர் அவசர கடிதம்

நாடு நெருக்கடியில் வீழ்வதை தடுப்பதற்கு, நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், சபாநாயகர் கரு ஜெயசூரிய தயவான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிஸ் ஆகியன விடுத்த கோரிக்கைகளுக்கு அமைய, சபாநாயகர் இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கிறார்.

ஜனநாயகம், நல்லாட்சிக்கான ஆணையைப் பெற்ற ஒருவர், நாடாளுமன்றத்தை 18 நாட்களுக்கு முடக்கி வைத்திருப்பதை, தன்னால் நம்ப முடியவில்லை என்றும் அந்தக் கடிதத்தில் சபாநாயகர் கூறியிருக்கிறார்.

அதேவேளை வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தைக் கூட்டும் தீர்மானத்தை சிறிலங்கா அதிபருக்குத் தெரியப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக, இன்று நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் சபாநாயகர் உறுதியளித்திருக்கிறார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *