மேலும்

கோத்தாவுக்கு அஞ்சும் மகிந்த; செல்வாக்கு இல்லாத பசில்- போட்டு உடைக்கிறார் கோமின் தயாசிறி

கோத்தாவை அடுத்த அதிபர் தேர்தலில் நிறுத்தினால், அவர் இரண்டாவது பதவிக்காலத்தையும் பெற்றுக்கொள்வார் என்று மகிந்த ராஜபக்ச அஞ்சுகிறார் என, சிறிலங்காவின் பிரபல சட்ட நிபுணரான கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்வியின் முக்கிய பகுதிகள்.

பசில் ராஜபக்ச அடுத்த அதிபர் வேட்பாளராக உயர்த்தப்பட்டால் சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு என்ன நடக்கும்?

கோத்தாபய  ராஜபக்சவை விட, பசில் ராஜபக்சவை  ஊக்குவிக்கவே மகிந்த ராஜபக்ச,  முயற்சிப்பதாக நான் நினைக்கிறேன். அதனால் தான்,  மகிந்தவின் புதிய கட்சிக்கு, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். பசில் ஒரு மக்கள் தலைவர் அல்ல.

மகிந்த ராஜபக்ச 2009 ஆம் ஆண்டு வரை, மிகவும் நல்லதொரு தலைவராக இருந்தார். அவரைச் சுற்றியிருந்தவர்கள், அவரைக் கெடுத்து விட்டனர். மக்கள் அவரை ‘மகாராஜா’ என்று அழைத்தார்கள்.

2015 ல் மகிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதில் அவர்கள் நல்ல வேலை செய்தனர். அவர் நல்லாட்சிக்காக இழந்தார்.

இரட்டைக் குடியுரிமை கொண்டிருப்பதால் கோத்தாபய ராஜபக்சவினால், தற்போதைய அரசியலமைப்பின் கீழ் அதிபர்  பதவிக்கு போட்டியிட முடியாதா?

தனது இரட்டைக் குடியுரிமையைக் கைவிடாமல் அவர் இப்போது ஒரு மிகப்பெரிய தவறைச் செய்கிறார். அவர் கடைசி நிமிடம் வரை காத்திருக்கக் கூடாது. அது மிகப் பெரிய ஆபத்து.

கோத்தாபய ராஜபக்ச சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் செல்வாக்குள்ளவர் அல்ல. ஆனால் அவருக்கு தொழில்துறையினர் மற்றும் வணிக சமூகத்தில் செல்வாக்கு உள்ளது.

கோத்தா வினையாற்றுபவர், கடுமையான ஒழுக்கத்தை பின்பற்றுபவர் என்று அவர்களுக்குத் தெரியும். போர் மற்றும் நகர்புற அபிவிருத்தியில் அவர் செய்ததை அவர்கள் அறிவார்கள்.

கோத்தாவை அடுத்த அதிபர் தேர்தலில் நிறுத்தினால், அவர் இரண்டாவது பதவிக்காலத்தையும் பெற்றுக் கொள்வார் என்று மகிந்த அஞ்சுகிறார். 10 ஆண்டுகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்குப் பின்னர், ஐதேகவுக்கு அதிகாரம் மாறும் போது, நாமல் ராஜபக்சவுக்கு வாய்ப்புக் கிடைக்காமல் போகும் என்றும் மகிந்தவுக்கு அச்சம் உள்ளது.

பசில் ராஜபக்ச மிகவும் சக்திவாய்ந்தவர். ஆனால் அவருக்கு மக்களின் ஆதரவு குறைவு.

சிறிலங்கா பொதுஜன முன்னணி கடைசியாக நடத்திய கொழும்பை நோக்கி மக்கள் சக்தி என்ற பேரணி, கோத்தாபய ராஜபக்சவின் மதிப்பைக் குறைக்கும் வகையில் அமைந்தது. அது மகிந்த ராஜபக்சவுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

கோத்தாபய ராஜபக்ச இந்த பேரணியை விட்டு வெளியே நின்றிருக்க வேண்டும். எனது ஆலோசனை என்னவெனில், அவர், கட்சியின் நியமனத்தைப் பெற வேண்டும். சுதந்திரமான வேட்பாளராக நின்று வெற்றி பெற முடியாது.

அவரது குழுவில் உள்ள இரு கூட்டாளிகள் வெளியேற்றப்பட வேண்டும், அவர்கள் யார் என்று அவரிடம் கூறினேன்.

இந்த நாட்டுக்குச் சேவையாற்றுவதில் அவர் தீவிரமாக இருந்தால், அவர் குழந்தைச் சகோதரர் என்ற மனநிலையில் இருந்து வளர வேண்டும். அவர் தன்னை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆனால், மகிந்த ராஜபக்சவை சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக நிறுத்துவதற்கான நகர்வுகள் மேற்கொள்ளப்படவில்லையே.

அவரால் மீண்டும் போட்டியிட முடியாது, மகிந்தவுக்கு எந்த வாய்ப்பும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர் சரியான நேரத்தில், 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு சவால் விடுக்கவில்லை.

தற்போது சட்டம் நடைமுறைக்கு வந்து விட்டது. இல்லை என்று சொல்வதற்கு மிகவும் தாமதமாகி விட்டது.

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வீழ்ச்சி என்னவாக இருக்கும்?

சிறிலங்கா பொதுஜன முன்னணி வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று நான் நினைக்கவில்லை. அதற்கு சக்திவாய்ந்த, செயற்திறன் மிக்க, தொலைநோக்குடைய தலைவர் தேவை. அவர் குட்டி அரசியலுக்குக் கட்டுப்பட்டவராக இருக்கக் கூடாது. அந்த நபராக இருப்பதற்கு கோத்தாபய ராஜபக்சவுக்கு வாய்ப்புள்ளது.

ஆனால், தமிழ் மக்கள் உள்ளிட்ட  குறிப்பிட்ட மக்களால் அவர் கடும்போக்காளராக பார்க்கப்படுகிறாரே?

அவர் ஒரு கடும்போக்காளர் தான். ஆனால், இது நல்லாட்சியுடன் இணைந்தது. கெட்டது அல்ல.

அதேவேளை, இந்த நாட்டிலுள்ள 70 வீதமான மக்கள் பௌத்தர்கள். அவர்கள் தங்களை வலியுறுத்துவதற்கான உரிமையைக் கொண்டுள்ளார்கள்.

பிரித்தானியாவில், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர், அங்கிலிக்கன் அல்லாத ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடியுமா? அங்கிலிக்கன் அல்லாத ஒருவர், நாட்டின் தலைவராக முடியுமா?

ட்ரம்ப் இருப்பதால் அமெரிக்காவில் பயங்கரவாத பிரச்சினை இல்லை.

பௌத்தர்களுக்கு அவர்களின் உரிமைகளை வழங்குவதற்கு நேரம் வந்துவிட்டது. ஆனால் அவர்கள் காட்டுக் குதிரைகளைப் போன்று ஆட்சி நடத்த முடியாது. அவர்கள் சட்டத்தின் கீழ் தான் ஆட்சியை நடத்த வேண்டும்.

வழிமூலம்        – Sunday observer
மொழியாக்கம் – கார்வண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *