மேலும்

சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன்

பன்முகத்தன்மையுள்ள, சகிப்புத்தன்மைமிக்க, நவயுக ஈழம் உருவாக வேண்டும் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டவர். தன்னுடைய வழிகாட்டிகள் சொன்ன வார்த்தைகளுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் ஒருவர் அர்ப்பணித்துக் கொண்டு வாழமுடியுமா? வாழமுடியும் என்று நிரூபித்த வாழ்க்கை சிதம்பரசெந்திநாதனுடையது.

சமூகப் பிரச்சினைகளுக்கு எதிரான போராட்டங்களில் முதல் ஆளாகக் கலந்து கொள்ளும் பழக்கம் அவரிடம் இறுதிவரை இருந்தது. ‘ஓர் மக்கள் சமூகத்தின் குரலை’ஓர்  இலக்கியவாதியின் உன்னதத்தை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லும் பதிவு இது.

தமிழர்களின் போராட்ட காலத்திலிருந்து அரசியலில் இருந்தவர் என்றாலும் இன்றைய அரசியல் கலாச்சாரத்தின் நிழல் அவர் மீது விழுந்ததேயில்லை.  ஒருகட்டத்தில் அரசியல் செயற்பாடுகளில் இருந்து விலகி, சமூகப் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்.

அரசியல் என்பது சமூகப்பணிகளுக்கானது என்று நம்பிய தலைமுறையினரின் மனிதராக, இருந்த சிதம்பர திருச்செந்திநாதன் 2018.10.15 இல் மறைந்தார்.

அவர் மறைந்தபோது ஊரிலேயே புதிய தலைமுறையினர் பலருக்கு அவரைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், தியாக வாழ்க்கைக்கு மறைவு ஏது?  அது சுடர்விட்டுக் கொண்டே இருக்கிறது. அடுத்ததடுத்த தலைமுறையினர் சமூகத்துக்கு சேவையைத் தொடங்க வேண்டும் என்றால், எந்த இடத்திலிருந்து அவர்கள் தொடங்க வேண்டும் என்பதை அந்தச் சுடர் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கும்!

இனி,

இனவாத மற்றும் மதக்குறுவாதங்களை வெறுப்பவர். வடதமிழீழத்தில் அப்பாவி மக்களை இராணுவக் குண்டர்கள் தாக்கிய சம்பவங்கள் நடந்தபோது, ‘போர் மேகங்கள் இன்னும் மறையவில்லை’என்று கலகக் குரல் எழுப்பியவர். யாழ் பல்கலைக்கழக அறிவியல் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த மானுடத்தின் விடுதலையில் பேசாப்பொருள் எனும் கருத்தரங்கில் 2009க்கு பின்னர் தமிழர் தாயகத்தில் நடக்கும் அரசியல் குழப்பங்களை ஆதாரங்களோடு வெளிப்படுத்தி அரசியல் என்பது மக்களுக்கானதே,  மாறாக தலைவர்களுக்கோ கட்சிகளுக்கோ ஆனது அல்ல என்று உரக்கக் குரல் கொடுத்தவர்.

தற்போது தமிழ் தேசியம் எதிர்பார்ப்பது உணர்ச்சி அரசியலை அல்ல. அது எதிர்பார்ப்பது சித்தாந்த அரசியலை என ஆதங்கப்பட்டவர்.

பொது வாழ்வில் கண்ணியம், நேர்மை, அன்பு நிலவ வேண்டும் என்று  பத்திரிகைகளிலும் கட்டுரையாக எழுதி வருகிறேன் என்று அடிக்கடி கூறுவார் திருச்செந்திநாதன்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் செந்திநாதனின் சொந்த ஊரான இணுவிலுக்கு, அவரை சந்தித்து நலம் விசாரிப்பதற்காகவும்  அவருடைய நூல்களைப் பிரசுரிக்கும் நிறுவனத்தினர் நடத்தும் ஆண்டு இலக்கிய விழாவை பார்ப்பதற்காகவும் என் நண்பர், ஊருக்குச் சென்று வந்தார்.

விழா தொடங்குவதற்கு முதல்நாள் செந்திநாதன் என் நண்பரை அந்த நிறுவன அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார். பழைய கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் அந்த அலுவலகம் இருந்தது. முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் செந்திநாதன் இங்குதான் தன்னுடைய முதல் நாடகமான ‘முள்முடி மன்னர்கள் கையெழுத்துப் பிரதிகளை எடுத்து வந்து கொடுத்திருக்கிறார்.

அன்று முதல் அவருடைய நாடகங்கள், அவருடைய இலக்கிய பதிப்புக்கள் உட்பட அனைத்தையும் அந்தப் பதிப்பகத்தார் தான் வெளியிட்டு வருகிறார்கள் எனவும், அவர்களை எனது நண்பருக்கு அறிமுகப்படுத்தி வைத்தாகவும், என் நண்பன் கூறியதோடு அவரின் பசுமையான நினைவுகளையும் என்னுடன் பகிர்ந்து கொண்டான்.

காரணம், நான் செந்திநாதனின் அப்பா சிதம்பர நாதன் அவர்களின் மாணவன். நான் அவரிடம் முறையாக நாடகவியலை கற்றுக் கொண்டவன். அத்தோடு அவரது நாடகங்களிலும் நடித்தவன். அந்த நினைவுகளையெல்லாம் என் நண்பனிடம் எடுத்துரைத்து, அம்பலத்தின் கவிதையிலும் அவன் கவிதை பாடும் நயத்தையும் நான் காதலிப்பவன் என்று அவனிடம் போய் சொல்லு, என்று சொல்லி,  என்னையும் நேசித்த அந்த அன்பு உள்ளம் எம்மை விட்டு பிரிந்த துயரச் செய்தி கனமாகவே இருக்கின்றது.

”எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் இன்று காலை காலமாகி விட்டார்.  உள்ளம், வெளிச்சம், ஆதாரம்,  ஈழநாடு, தளவாசல் ஆகியவற்றின் ஆசிரியபீடங்களில் இருந்தவர்.

முள்முடி மன்னர்கள், இருள் இரவில் அல்ல, மருத்துவர்களின் மரணம், என்றாவது ஒருநாள், என்னுடையதும் அம்மாவினுடையதும் உட்பட பல நூல்களை எழுதியவர். நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக எழுத்திலும் இலக்கியச் செயற்பாடுகளிலும் இயங்கி வந்தவர். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு இலக்கியம், எழுத்து, பிறசெயற்பாடுகளின் வழியாகப் பங்களிப்புகளைச் செய்து வந்தவர். நிர்வாக உத்தியோகத்தராக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பணியாற்றியவர்.

கடந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவரோடு உறவாடியும் பணியாற்றியும் வந்திருக்கிறேன். கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு துணைவியாரை இழந்திருந்தார். இப்பொழுது அவரும் திரும்ப வரமுடியாத பயணத்தில் சென்று விட்டார். அவரை இழந்து நிற்கும் பிள்ளைகளுக்கும் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். தாங்கொணாத் துயரம் மிக்க கணங்கள் இவை. என்ன செய்வது என்று தெரியாத நிலையில் உள்ளேன்” என்கின்றார்  நண்பர் கருணாகரன் அவர்கள்.

“திருச்செந்திநாதனாக 1964களில் இவரது தந்தையாரோடு நான் பழகிய நாட்களில் மன்னாரில் முதலில் கண்டேன். பிற்காலத்தில் பிரபல எழுத்தாளராக சிதம்பர திருச்செந்திநாதனாகச் சந்தித்தேன். நான் தமிழ்நாட்டிற்கு புறப்பட்ட அன்றும், அவரை கிளிநொச்சியில் சந்தித்து விட்டுத்தான் புறப்பட்டேன். என்னுடன் மிகவும் அன்போடும் பாசத்துடனும் பழகியவர் இன்று இயற்கையுடன் இணைந்த செய்தி அறிந்தேன். நெஞ்சு கனக்கின்றது. அன்னாரின் உயிர் இயற்கையோடு இணைந்து அமைதி பெறட்டும். கனத்த மனதோடு எனது ஆழ்ந்த அஞ்சலிகள்.”என்கின்றார் நண்பர் இலங்கநாதன் சிற்றம்பலம் அவர்கள்.

இப்படி எத்தனை இலக்கியவாதிகளின் நட்பை பெற்றிருந்தவரின் இழப்பு என்பது  ஈடு செய்யமுடியாதது.

திருச்செந்தி நாதன் அவர்கள் தன்னுடைய அரசியலையோ தேசப்பற்றையோ கடைவிரித்துக் காட்டியதில்லை. தன்னுடைய ஊர், தன்னுடைய மாநிலம், தன்னுடைய நாடு மற்றும் உலகம் ஆகியவற்றின் மீதான நேசத்தை எப்போதும் விட்டுக்கொடுத்ததும் இல்லை. தமிழர்களின் கலாச்சார வரலாற்றை அற்புதமாக எழுதும் அளவுக்கு தமிழர்களின் கலைகள் பற்றிய ஆழ்ந்த அறிவும் புரிதலும் அவருக்கு உண்டு. தமிழர்களின் கலைகள் என்றால் அது இசை, இலக்கியம், நாட்டியம் என்று அனைத்தும் சேர்ந்தது.

அதிலும் வடக்கு, கிழக்கு, மலையகம் என்ற பேதம் கிடையாது. மக்களுடைய தொன்மக் கலைகளும் அவருக்குத் தெரியும். அவரது மொழிப்புலமைகளும்  ஆழ்ந்த சித்தாந்த தேடலும் அவர் தமிழர்களின் கலைகள் பற்றிய அரங்கவியலுக்கு  அணிகலனாக அமைந்தன. எந்த ஆக்கபூர்வமான படைப்பும் அசலாக இருக்க வேண்டும், ஒன்று அல்லது பலவற்றின் கலவையாக அமைந்து விடக்கூடாது என்பதே அவரின் சித்தாந்தமாகும்.

தமிழர்களின் வாழ்வியல் அவலங்களை இருள் இரவில் அல்லஎன எழுதிப் பிரசுரித்த அவர், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க மறுத்து விட்டார். என்னைப் போன்றவர்கள் படிக்க வேண்டாம் என்று நினைக்கிறாரோ அல்லது மேலும் சில அத்தியாயங்களைச் சேர்க்க விரும்பினாரோ தெரியவில்லை.

மே 19-ல் நடந்த துன்பியல் சார்ந்து எப்போதும் விருப்பு வெறுப்புக்கள் இன்றி விமர்சனங்களைமுன்வைக்கும் செந்திநாதன்,  தமிழனை உலக அரங்கில் நிமிர வைத்த, தமிழ்த் தேசியத்தின் அடையாளத்துக்கே அங்கீகாரம் கொடுக்காத தமிழ்த் தேசியம் இருந்தென்ன வீழ்ந்தென்ன என எமது ஊர் வழக்கில் ஆதங்கத்தோடு திட்டுவார்.  அத்தகைய ஓர் கொள்கைப் பிடிப்பாளனை ஒரு தூய்மை மிகு சித்தாந்தவாதியை தமிழ்த் தேசியம் இழந்து நிற்கின்றது.

விளிம்பை மையம் ஆக்கியவர்

சிறுகதை என்ற கலைவடிவம் இலக்கியப் பரப்பில் ஏற்கனவே செய்து வைத்திருந்த மரபுவாதத்தன்மையை  அவர் உடைத்தார். சொல்லாடல் எனும் போர்வையில்  தமிழ் மொழிச் சொற்றொடர், மாறுவேடமிட்டு ஒரு தன்னின்பத்தை வாசகனுக்கு வழங்கியிருந்தன. அதை உடைத்துப் போட்டவர்களில் திருச்செந்திநாதனும் முக்கியமானவர்.

வீழ்த்தப்பட்டாலும் வீழ்ந்து போகாத விளிம்புநிலை மக்களின் ஒப்பாரியும், கண்ணீரும், விழுமியத்தின் வீழ்ச்சிகளும், வீழ்ச்சியின் விழுமியங்களும், அழிந்து போகமாட்டேன் என்று அடம்பிடிக்கும் ஈழத்தமிழ்த் தத்துவ மரபின் கடைசித்துடிப்புகளும் திருச்செந்திநாதனால் கலைப்படுத்தப்பட்டன.

உரைநடைக்கு முன்னெப்போதுமில்லாத இலக்கு செந்திநாதனின் எழுத்துகளில் நிர்மாணிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் வலியை, பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத மனித மனங்களுக்குக் கடத்துமொரு ரசவாதத்தை செந்திநாதனின் எழுத்து செய்தது.

உடல் என்ற சதைக்கோளம் அழுகி ஒழுகும் நிலையிலும் தத்துவ விசாரத்தோடு பீடிப்புகையில் நிலா வைரசிக்கும் ஒரு பெருநோயாளி –நான் என சொல்லும் செந்தில்நாதன்,

கண்ணில்லாவிடில் ஒன்றும் கெட்டுப்போகாது என்ற அனுபவ முடிவோடு கண்ணொடு கண்ணினை நோக்காமல், சொற்களால் மட்டுமே காதல் வளர்க்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்-

திறந்தவெளியில் முதலிரவு காணமுடியாமல் சொர்க்கத்திற்கும் நரகத்திற்குமிடையே பந்தாடப்படும் நடைபாதைத் தம்பதிகள் –

இராணுவ முன்னரங்கில் தனது பறிக்கப்பட்ட காணி  நிலத்தை மீட்கப் போராடி, கைகளும் கால்களும் திசைக்கொன்றாய்த் திரும்பி முறுக்கி நிற்கும் ஈழக்கிழவன்  –

ஒரு மூன்றாம் மனிதன் தன்தலையில் சூட்டிய பூவைக்கொத்துச் சிகையோடு வீதியில் விட்டெறிந்து தன் சுயதர்மத்தைக் காத்துக் கொள்ளும் ஒரு விதவைப் போராளி –

தாலிகட்டி அழைத்துச் சென்று தன்னை விபசாரத்துக்குத் தள்ளமுயன்ற நகரத்துக் கணவனைத் தூவென்று துப்பித்தூக்கியெறிந்து தன்னை நேசித்தவனைத் தேடித் திரும்பிவந்து தனக்கான வாழ்வை வரித்துக்கொள்ளும் ஒருகிராமத்துத் தமிழிச்சி –

என இப்படி எழுத்தாலும் வாழ்க்கையாலும் நிராகரிக்கப்பட்டவர்களை உயிர்ப்புள்ள பாத்திரங்களாய் உலவ விட்டதற்கு அவர் சித்தாந்த பாசறையில் வளர்ந்தவர் என்பது மட்டுமே காரணமன்று.

வறுமையுற்று பாலற்றுப் போனதனால் முலைத்துவாரம் தூர்ந்து விட்டது என்ற பொருளில் ‘இல்லிதூர்ந்த பொல்லாவறுமுலை’என்று பாடிய சங்க இலக்கியத்தின் மரபுத் தொடர்ச்சி அவர் என்றும் சொல்லலாம். போகிறபோக்கில் செந்திநாதன் சிந்திய வைரங்கள் முறுக்கி நிற்கும் எழுத்தின் முருகியலுக்குச் சாட்சியாகும்.

இவ்வாறு தமிழர்களின் அவலத்தை நரம்புதெறிக்க எழுதுகிறது செந்திநாதனின் பேனா.

புல்லாங்குழலுக்குள் பறை ஒலி கேட்டது போல் செந்திநாதனின் கலை ஓட்டத்தில் தெறிக்கும் இந்த ஆரவாரத்தின் மீது விமர்சன உலகம் விசனம் காட்டியது. “செந்திநாதனின் எழுத்தில் கலையமைதி இல்லை”என்றார் எங்கள் பிதாமகன் ஏ.சி.தாசீசியஸ் அவர்கள். “உருவ ஒழுங்குமில்லை”என்றது இன்னொரு கூட்டம். காலம் எல்லாவற்றையும் புறம்தள்ளிப் படைப்பாளியின் சமூக அக்கறையைக் கொண்டாடிக் கொண்டது.

எண்பதுகளுக்கு முன்னரான  அன்றைய எழுத்தாளர்கள் நவீனத்துவப் படைப்பாளிகளைப் பொருட்படுத்தவில்லை என்பதும், வல்லமைசார் தமிழ்த் தேசிய பிதாமகர்கள் சிலர், நவீனத்துவ எழுத்தாளர்களைக் கண்டுகொள்ளவில்லை என்பதும் இலக்கியத்திற்கு நேர்ந்த இறந்தகால இழப்பாகும்.

ஆனால், செந்திநாதனுக்கு அந்த துர்ப்பேறு நேரவில்லை. தன் இறுதிக்காலத்தில் எல்லாராலும் கொண்டாடப்பட்ட படைப்பாளி ஆனார். ஒரு படைப்பாளன் என்பவன் எழுதுவோன் மட்டுமல்லன். ஆழ்ந்த வாசகனும்அவனே; அழுந்திய விமர்சகனும் அவனே. செந்திநாதன் நல்ல வாசகர் மற்றும் நல்ல விமர்சகர். ஒரே பொருள் குறித்த இரு கதைகளை அவர் வாசித்ததும் அதில் ஆகச்சிறந்தது எது என்று அடையாளங்காட்டியதும் மறக்கவியலாதவை.

கதைஒன்று:

துரத்தும் காவல்துறையிடம் தப்பித்து ஒரு வீட்டுக்குள் ஓடி ஒளிகிறார் தலைவர். அது ஒரு தோழனின் வீடு. கைக்குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டிக் கொண்டிருக்கிறாள் தோழனின் சகோதரி. தலைவர் உள்ளே ஓடிவந்து ஒளிகிறார்.

வேட்டை நாயின் மூர்க்கத்தோடு வீட்டுக்குள் நுழைந்த காவல்துறை எங்கே அவன் என்று மிரட்டுகிறது. பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தையைத் தன் மார்பிலிருந்து உருவுகிறாள்; ஓங்கித் தரையிலடிக்கிறாள்; குழந்தை சிதறுகிறது; சூழ்நிலை திசைமாறுகிறது; காவல்துறை போய்விடுகிறது; தலைவர் காப்பாற்றப்படுகிறார்.

கதை இரண்டு:

உச்சத்தில் வியட்நாம் யுத்தம். ஒரு சிற்றூரை இராணுவம் வளைக்கிறது. ஊரே தப்பித்து ஓடி ஒரு பாலத்தின் அடியில் பதுங்கியிருக்கிறது. பாலத்தின் மேலே இராணுவத்தின் காலடிச் சத்தம் கேட்கிறது. பாலத்தின் கீழே மூச்சுவிடும் ஓசையைக் கூட வெளிவிடாமல் அச்ச மெளனத்தில் அடைந்து கிடக்கிறார்கள் ஊர் மக்கள். அந்தக் கூட்டத்தில் கைக்குழந்தையோடு ஒரு தாய். அப்போது அது அழ எத்தனிக்கிறது. அழுத குழந்தையின் வாயை அழுத்திப் பொத்துகிறாள் தாய்.

இப்போது மூக்குவழியே கீச்சிடுகிறது. மூக்கையும்பொத்துகிறாள். அது கைகால்களை உதறுகிறது. இன்னும்அதுஅழப் பார்க்கிறது. அவள் இன்னும் அழுத்துகிறாள். தேடிவந்த இராணுவம் பாலத்தைக் கடந்து போகிறது. பொத்திய கையை எடுக்கிறாள்தாய்;  குழந்தை இறந்துகிடக்கிறது. வீறிட்டுக் கத்துவதற்குத் தாய் எத்தனிக்கிறாள்; இப்போது கணவனின் கை அவள் வாயைப் பொத்துகிறது.

இந்த இரண்டு கதைகளில் முதல் கதை செயற்கை. அதில் அதிர்ச்சி வைத்தியம் திட்டமிட்டு ஊட்டப்படுகிறது. இரண்டாம் கதை இயற்கை. அது சத்தியத்தின் கோட்டுக்குள் இயங்குகிறது. சத்தியத்தின் கோட்டைத் தாண்டுகிற எந்தக் கதையும் கலைக்கு உண்மையாய் இருப்பதில்லை. எனவே, இதில் இரண்டாம் கதையே சிறந்த கதை என்று தீர்ப்பளிக்கிறார் செந்திநாதன்.

இந்தக் கதை உண்மையில் ஜெயகாந்தனின் எழுத்தாக இலக்கிய சோலையாக எமக்கு ஒப்புவமை காட்டுகின்றார் செந்திநாதன்.

அரங்கியல் அதுவும் சினிமா ஒரு நட்சத்திர தேவதை. கலைகளின் ராணி. அவளைக் காதலித்தோர் பட்டியலில் செந்தி நாதனும் இருந்தார். தன் எழுத்து கலைவடிவம் பூணவேண்டும் என்ற வேட்கை அவருக்குள் விளைந்திருக்கக் கூடும். உலக சினிமாவைத் தமிழில் தரவேண்டும் என்ற உள்ளுணர்வும் அவரை உந்தியிருக்கக் கூடும். கலையுலகத்தைக் கையில் எடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெற்றியும் செந்திநாதனை சீண்டியிருக்கக் கூடும்.

சமரசம் செய்து கொள்ளாத அவரது ‘முள்முடி மன்னர்கள்’ தேசியத் தலைவரின் அங்கீகாரத்தைப் பெற்றது.

சுத்தமான தங்கத்தில் நகை செய்ய முடியாது என்றும், துணியைக் கிழிக்காமல் சட்டை தைக்க முடியாது; எழுத்து ஊடகம் வேறு – காட்சி ஊடகம் வேறு என்றும் விளங்கிக் கொள்வதற்கு செந்திநாதன் கொடுத்த விலை அதிகம்.  அவர் ஒரு கட்டத்தில் எழுதுகிறார்: “என்னை சிலர் கிறுக்கன் என்று நினைத்திருக்கலாம். சில இலக்கிய வட்டங்களில் என்னை அப்படித்தான் அழைத்தார்கள் என்று எனக்குத் தெரியும். நானும் அப்படித்தான் இருந்தேன்” என்றார்.

செந்திநாதன் என்ற இலக்கியவாதியின் அரசியல் உற்றுநோக்கத்தக்கது மற்றும் கற்றுணரத்தக்கது. செந்திநாதன் என்ற எழுத்தாளனுக்கு அரசியல் ஓர் ஒலிபெருக்கியை உபயம் தந்ததே தவிர, அரசியலுக்கு செந்திநாதனோ-செந்தில்நாதனுக்கு அரசியலோ பெரிதும் பயன்பட்டதாய் உணர முடியவில்லை. அவரது கலையுலகக் கனவு சக வெறுப்புலக வல்லாளர்களின் வல்லாண்மையால் சூறையாடப்பட்டது.

அரசியல் கனவோ விடுதலை இயக்கத்தின் தீவிரத்தால் சிதறுண்டு போனது. கடைசியில்அவர் தமிழ்த் தேசியத்தை நேசித்தார்; தமிழ்த் தேசியவாதிகளை நேசிக்கவில்லை. தலைவர் பிரபாகரனை நேசித்தார்; புலிகளை நேசிக்கவில்லை என்பதுவும் ஓர் வரலாற்றுத் துயரம்தான்?

ஒவ்வொரு தனிமனித வாழ்வும் பெருமையாலும் சிறுமையாலும் நிறைந்து வழிகிறது. அவரது வாழ்விலும் இந்த இரண்டையும் கடந்தே அவர் வந்திருக்கின்றார்?”

இலக்கியம் என்பது வாழ்வின் நிழல் என்றால் இலக்கியத்துக்கும் இதுவே பொருந்தும். இலக்கியம் என்பதும் அந்தந்தக் காலத்து நியாயம் தான். செந்திநாதன் நாடக நெறியாளர் மட்டுமல்ல ஒரு கவிஞரும் கூட. அவர் எழுதியவற்றுள் எனக்குப் பெரிதும் பிடித்த கவிதை ‘எண்ணிப்பார் உன் தேசத்தை ’என்பதாகும்.

நல்லதைச்சொல்லுகிறேன் / இங்கு நடந்ததைச் சொல்லுகிறேன் / இதற்கெனைக் / கொல்வதும் கொன்று / கோயிலில் வைப்பதும் / கொள்கை உமக்கென்றால் – உம்முடன் கூடிஇருப்பதுண்டோ”

ஆமாம். புரட்டிச் சிந்தித்தவனைப் புரிந்து கொள்ளாத இந்தச் சமூகம் புரியாமல் கொல்லும்; பிறகு புரிந்து கொள்ளும். புரிந்து கொண்ட பிறகு கொல்லப்பட்டவனைத் தூக்கிக் தலையில் வைத்துக் கொண்டாடும். அப்போது எழுத்தாளன் கேட்பான். “அட மூட மக்களே! உங்களோடு கூடி இருப்பதுண்டோ?”

சமூகம் கேட்கும்: “எம்மோடு நீங்கள் கூடி இருக்க வேண்டாம். உங்களோடு நாங்கள் கூடி இருக்கலாமல்லவோ?”

செந்தில் நாதனோடு கூடி இருப்போம்!

என்றும் உங்களை நேசிக்கும்
நண்பன்
அகதித் தமிழன் கிருஸ்ணா அம்பலவாணர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *