மேலும்

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திச் செயற்பாடுகளை வழிநடத்தவும், கண்காணிக்கவும், அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டச் செயலணிக்கு, 9 அமைச்சுக்களின் செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான சிறப்பு அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செயலணியின் மூலம் எதிர்பார்க்கப்படும் சாதகமான விளைவுகளை அடைவதற்கு, பல்வேறு துறைகளின் ஆளணி வளங்களின் பிரதிநிதித்துவம் அவசியம்.

இதனால், இந்த செயலணியின் உறுப்பினர்கள் மேலும் பரந்தளவிலானதாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. என்றும் அரசிதழ் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய, மாகாணசபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டு அமைச்சின் செயலர் கமல் பத்மசிறி, சமூக நலன் மற்றும் ஆரம்ப தொழில்துறை  அமைச்சின் செயலர் பந்துல விக்கிரமஆராச்சி, கல்வி அமைச்சின் செயலர் சுனில் ஹெற்றியாராச்சி, நிலையான அபிவிருத்தி, வன உயிரினங்கள், மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சின் செயலர் கீத்சிறி, மகாவலி அபிவிருத்தி அமைச்சின் செயலர் திசநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலர் கபில வைத்யரத்ன, சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலர் வீரக்கோன், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலர் கொடிக்கார, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலர் அசோக அலவத்த ஆகியோரே, சிறிலங்கா அதிபர் செயலணியின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கு அபிவிருத்திச் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கான அதிபர் செயலணி 2018 ஜூன் மாதம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *