மேலும்

மொஸ்கோவில் உள்ள சிறிலங்கா பாதுகாப்பு ஆலோசகரை நாடு திரும்ப உத்தரவு

ரஷ்யாவுக்கான சிறிலங்கா தூதுவராக அண்மையில் பொறுப்பேற்ற, கலாநிதி தயான் ஜயத்திலகவின் முறைப்பாட்டை அடுத்து, மொஸ்கோவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய குறூப் கப்டன் சன்ன திசநாயக்க கொழும்புக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா விமானப்படையைச் சேர்ந்த, குறூப் கப்டன் சன்ன திசநாயக்க மொஸ்கோவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தை பிரித்து வைத்திருந்தார் என்றும், தூதரகத்தில் ஒரு பகுதியை பாதுகாப்புப் பிரிவு என்று உருவாக்கியிருந்தார் எனவும், தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா தூதரகத்தின் ஒரு பகுதியின் தலைவராக அவர் இருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

குறித்த அதிகாரி மொஸ்கோவில் தனது பாவனைக்காக 80 ஆயிரம் டொலர் பெறுமதியான வாகனத்தை இறக்குமதி செய்துள்ளார். இதற்கான கொடுப்பனவுக்கு, சிறிலங்கா விமானப்படைத் தளபதி கபில ஜெயம்பதி அனுமதி அளித்திருக்கிறார் என்றும் தயார் ஜெயதிலக குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் மொஸ்கோவுக்குச் சென்றிருந்த சிறிலங்கா விமானப்படைத் தளபதி கபில ஜெயம்பதியிடம், பாதுகாப்பு ஆலோசகர் குறூப் கப்டன் சன்ன திசநாயக்கவுக்கு எதிரான நடவடிக்கை பற்றி கலாநிதி தயான் ஜெயதிலக, முதலில் கூறியிருந்தார்.

அதன் பின்னர் அவர் வெளிவிவகார அமைச்சுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பினார். அந்த அறிக்கை அங்கிருந்து பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து. விமானியும் சிறிலங்கா விமானப்படையின் முன்னாள் உயர்மட்டத் தளபதி ஒருவரின் மகனுமான, பாதுகாப்பு ஆலோசகர் குறூப் கப்டன் சன்ன திசநாயக்கவை உடனடியாக நாடு திரும்புமாறு கேட்க வெளிவிவகார அமைச்சும், பாதுகாப்பு அமைச்சும் முடிவு செய்துள்ளன.

அதேவேளை, குறித்த விமானப்படை அதிகாரியின் பெயர் வேறுசில பிரச்சினைகளிலும் தொடர்புபட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஒரு சந்தர்ப்பத்தில், இவர் தமக்கு விசிஷ்ட சேவா விபூஷண விருதை தருமாறு சிறிலங்கா விமானப்படைத் தளபதி கபில ஜெயம்பதியிடம் கேட்டிருந்தார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

எனினும், அந்த விருது அங்கீகரிக்கப்பட்டுள்ளதா சிறிலங்கா அதிபர் செயலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், மொஸ்கோவில் இருந்த பாதுகாப்பு ஆலோசகருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தை அனுப்பிய அதிகாரி சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

அதேவேளை, மொஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு அடிக்கடி சென்று வருகிறார் என்றும், அங்குள்ள இராணுவ அதிகாரிகளுடன் நெருங்கிப் பழகுகிறார் என்றும் சிறிலங்காவின் பாதுகாப்பு ஆலோசகர் மீது மற்றொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. எனினும் அதனை அவர் நிராகரித்திருந்தார்.

இவர் திருப்பி அழைக்கப்படுவதை அடுத்து, மொஸ்கோவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக, குறூப் கப்டன் உதித்த பிரசன்ன நியமிக்கப்படவுள்ளார். இவர் விமானப்படையின் தொழில்நுட்ப பொறியியல் பிரிவைச் சேர்ந்தவராவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *