மேலும்

சிறிலங்காவுடனான நடைமுறை ஒத்துழைப்பு துரித வளர்ச்சி – சீனத் தூதுவர் பெருமிதம்

சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நடைமுறை ஒத்துழைப்பு கடந்த ஆண்டில் துரிதமாக வளர்ச்சியடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார், சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான்.

கொழும்பில் நேற்றுமுன்தினம் மாலை நடந்த சீனாவின் தேசிய நாள் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் சீனர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக அதிகரிக்கும். 2017இல், 260,000 சீனர்கள் சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.  இந்த எண்ணிக்கை, 2018இல், 300,000 ஆக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அதிகமான இலங்கையர்கள், சீனாவுக்குப் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். இலங்கையர்களுக்கு உயர்கல்வி மற்றும் பயிற்சிக்கான முக்கியமான இடமாக, சீனா மாறியிருக்கிறது.

கொழும்பு துறைமுக நகருக்கான நிலத்தை மீட்கும் பணிகள் விரைவில் முடிவடையும், அதன் பின்னர் இரண்டாவது கட்ட அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படும். துறைமுக நகரம், சிறிலங்காவின் அபிவிருத்திக்குப் பெரும் வாய்ப்பாக இருக்கும்.

கடந்தஒரு ஆண்டுக்கு மேலாக சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான, நட்புறவு தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. உயர்மட்டப் பயணங்கள் கிரமமாக இடம்பெறுகின்றன.

சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் நடைமுறை ஒத்துழைப்பு விடயத்தில், வரலாற்றிலேயே இது மிகச் சிறந்த காலகட்டம்.

எதிர்வரும் நொவம்பர் மாதம், சீனா முதலாவது, அனைத்துலக இறக்குமதி, ஏற்றுமதி கண்காட்சியை ஷங்காயில் நடத்தவுள்ளது. இந்த கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் சிறிலங்கா குழுவுடன் பங்கேற்குமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, அதிகாரபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா தனது ஏராளமான உற்பத்திகளை 1.3 பில்லியன் சீன மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் வாய்ப்பை இது ஏற்படுத்திக் கொடுக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க, சபாநாயகர் கரு ஜெயசூரிய, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், மற்றும் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இராணுவ அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *