மேலும்

கூட்டுப் பயிற்சிக்காக இந்தியாவின் 3 போர்க்கப்பல்கள், 3 விமானங்கள் திருகோணமலை வருகை

சிறிலங்கா கடற்படையுடனான கூட்டுப் பயிற்சிக்காக, இந்தியக் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்களும் மூன்று விமானங்களும் நேற்று திருகோணமலையை வந்தடைந்துள்ளன.

இந்திய சிறிலங்கா கடற்படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், SLINEX-2018 கூட்டுப் பயிற்சி நேற்று திருகோணமலையில் ஆரம்பமானது.

இந்தக் கூட்டுப் பயிற்சியில், சிறிலங்கா மற்றும் இந்திய கடற்படைகளின் சார்பில் தலா 3 போர்க்கப்பல்களும், இரண்டு தரப்பிலுமாக சுமார் 1000 கடற்படையினரும் பங்கேற்கின்றனர். எதிர்வரும் 13ஆம் நாள் வரை இந்தக் கூட்டுப் பயிற்சி தொடரவுள்ளது.

சிறிலங்கா கடற்படையின் தரப்பில், சயுரால, சமுத்ர, சுரனிமல ஆகிய போர்க்கப்பல்கள் இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கின்றன.

இந்தியக் கடற்படை தரப்பில், ஐஎன்எஸ் சுமித்ரா, ஐஎன்எஸ் கிர்ச், ஐஎன்எஸ் கோரா திவ் ஆகிய மூன்று போர்க்கப்பல்களும், இரண்டு டோனியர் கண்காணிப்பு விமானங்களும், ஒரு உலங்குவானூர்தியும் பங்கேற்கின்றன.

இந்தியக் கடற்படையின் 105.3 மீற்றர் நீளமாக ஐஎன்எஸ் சுமித்ரா போர்க்கப்பலில், 230 கடற்படையினரும், 91.1 மீற்றர் நீளமான ஐஎன்எஸ் கிரிச் போர்க்கப்பலில், 230 கடற்படையினரும், 48.9 மீற்றர் நீளமான ஐஎன்எஸ் கிரிச் போர்க்கப்பலில், 175 கடற்படையினரும் கூட்டுப் பயிற்சிக்காக திருகோணமலை வந்துள்ளனர்.

இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படும் இந்தக் கூட்டுப் பயிற்சியில் முதற்கட்டமாக துறைமுக பயிற்சி நடந்து வருகிறது. வரும் 10 ஆம் நாள் வரை இது தொடரும்.

இரண்டாவது கட்டமாக, வரும் 11 ஆம் நாள் தொடக்கம் 13ஆம் நாள் வரை, திருகோணமலை கடலில் கூட்டுப் பயிற்சி நடத்தப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *