மேலும்

விக்கியைச் சந்திக்க அழைக்கிறார் சம்பந்தன்

“உடனடியாக ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்க நான் நினைக்கவில்லை. புதிய கட்சியை தொடங்குவது எனது வயதில் மிகவும் இலகுவானதாக இருக்காது இது கலந்துரையாடல்களாகத் தான் சென்று கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“எவ்வாறாயினும், பிந்திய நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

புதிய கட்சியை ஆரம்பிக்க வேண்டாம் என்றும், தமது கட்சியுடன் இணைந்திருக்குமாறும் அவர் என்னிடம் கேட்கக் கூடும். அது எமக்குத் தெரியாது.” என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா போன்ற சில புறச் சக்திகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனவா என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன்,

அது உண்மையாக இருக்கலாம். என்னுடன் அதுபற்றிக் கலந்துரையாடப்படவில்லை. ஆனால் அது உண்மையாக இருக்கக் கூடும்.

ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கலாம். இது எல்லாமே, மக்கள் எப்படி ஏமாற்றப்பட்டார்கள் என்பதை சார்ந்திருக்கிறது.

நான் ஒன்றையும் மறைக்கவில்லை. எனது நிலைப்பாடு என்னவென்றால், சமஸ்டியைக் கோரியே நாங்கள் பதவிக்கு வந்திருக்கிறோம். சமஸ்டியைக் கோரும் நிலையில் மாற்றம் செய்வதானால்,  நாங்கள் மீண்டும் மக்களிடம் சென்று அவர்களின் ஆணையைப் பெற வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *